நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே இருக்கிறது மல்லியம் குச்சிபாளையம் கிராமம்.  இந்த ஊரைச் சேர்ந்தவர் ரமேஷ். அந்த பகுதியில் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் சித்தர்காடு பகுதியில் வந்து கொண்டிருந்தார். 

அதே சாலையின் எதிரே மயிலாடுதுறை அருகே இருக்கும் கூறைநாட்டைச் சேர்ந்த கார்த்தி(28) என்பவரும் தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது எதிரெதிரே வந்த இருவரும் கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதிக்கொண்டனர். இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயங்களுடன் ரத்தவெள்ளத்தில் கார்த்தி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அந்த வழியாக சென்றவர்கள் கார்த்தியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே அவர் மரணமடைந்தார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் ரமேஷ் மற்றும் கார்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் மயிலாடுதுறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.