காலை 6.29 மணியளவில் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 8.9 ரிக்டர் அளவில் பதிவாகியது. அதனால் ஏற்பட்ட ஆழிப் பேரலைகள் இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து என பல நாடுகளை பயங்கரமாக தாக்கியது. இதில் கடற்கரைகளிலும், கடற்கரை ஓரங்களில் இருக்கும் நகரங்களிலும் வசித்த மக்கள் பல்லாயிரக்கணக்கானோர் நீரில் மூழ்கி பலியாகினர். 

கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி காலையில் இந்தோனேசியாவில் இருக்கும் சுமத்ரா தீவின் கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆழிப் பேரலைகள் பொங்கி எழுந்தன. இதனால் சுனாமி ஏற்பட்டு இந்தியா உட்பட 14 நாடுகளில் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர். டிசம்பர் 25, கிறிஸ்மஸ் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடிய மக்கள் மறுநாள் விடுமுறை என்பதால் அதிகாலையில் கடற்கரைகளில் திரண்டிருந்தனர். கடற்கரையோரம் வாழும் மீனவ கிராமத்திலும் கிறிஸ்துமஸ் கொண்டாடிய களைப்பில் மக்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன் வாங்குவதற்கும் அதிகளவில் கூட்டம் கடற்கரைகளில் கூடியது. முதியவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் என பெரும்பாலானோர் கடற்கரைகளில் திரண்டிருந்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அப்போது காலை 6.29 மணியளவில் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 8.9 ரிக்டர் அளவில் பதிவாகியது. அதனால் ஏற்பட்ட ஆழிப் பேரலைகள் இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து என பல நாடுகளை பயங்கரமாக தாக்கியது. இதில் கடற்கரைகளிலும், கடற்கரை ஓரங்களில் இருக்கும் நகரங்களிலும் வசித்த மக்கள் பல்லாயிரக்கணக்கானோர் நீரில் மூழ்கி பலியாகினர். இந்தியாவிலும் கணக்கிட முடியாத இழப்புகளை சுனாமி பேரலை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்தியாவில் அதிகமாக பாதிப்படைந்தது தமிழகம்தான்.

தமிழகத்தின் நாகை, சென்னை, கடலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். கன்னியாகுமரியில் இருக்கும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை உயரத்திற்கு அலைகள் சீறி எழுந்தது. தமிழ்நாட்டில் மிக அதிகமாக நாகை மாவட்டம் பாதிப்புக்குள்ளானது. மாவட்டத்திலிருக்கும் 38 கிராமங்கள் முழுவதுமாக கடல் நீரில் மூழ்கின. மொத்தமாக நாகை மாவட்டத்தில் மட்டும் 6 ஆயிரம் பேர் சுனாமி பேரலைக்கு உயிரிழந்தனர். இன்றுடன் சுனாமி பேரலை உலகில் கோரத்தாண்டவம் ஆடி 15 ஆண்டுகள் நிறைவடைகிறது. சுனாமியில் தங்கள் உறவுகளையும், உடைமைகளையும் இழந்த மக்கள் இன்றளவும் அந்த கோர சம்பவத்தில் இருந்து நீங்க முடியாமல்தான் தவிக்கின்றனர்.

இன்று சுனாமி நினைவு தினத்தையொட்டி காலை முதலே சென்னை, நாகை உட்பட கடலோர மாவட்டங்களில் மக்கள் திரண்டு வந்து தங்கள் உறவுகளை நினைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாகை மாவட்டத்தில் மட்டும் 21 இடங்களில் சுனாமி நினைவு நாள் அமைதிப்பேரணியும் மலரஞ்சலி நிகழ்வு நடைபெறுகிறது. சுனாமியில் உயிரிழந்த மக்களை நினைவு கூறும் வகையில் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.