பெரிய வியாழன் இறைவழிபாடு; வேளாங்கண்ணியில் சீடர்களின் பாதங்களை கழுவி திருப்பலி நிறைவேற்றம்
புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா போராலயத்தில் நடைபெற்ற பெரிய வியாழன் இறைவழிபாட்டில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். விழாவின் ஒரு பகுதியாக சீடர்களின் பாதங்களை கழுவி திருப்பலி நிறைவேற்றம்:
இயேசு கிறிஸ்து சிலுவையில் பாடுபட்டு மரித்த காலத்தை உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்கள் தவக்காலமாக கடைபிடித்து வருகின்றனர். கிறிஸ்தவர்களின் தவக்காலம் பிப்ரவரி 14 ம் தேதி சாம்பல் புதன் அன்று தொடங்கியது. இந்த 40 நாட்கள் தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் ஜெபம், தவம், தானம் செய்து இறைவனின் அருளையும், ஆசியையும் வேண்டுகின்றனர்.
இதனை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டம் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் இன்று பெரிய வியாழன் தினத்தையொட்டி சிறப்பு திருப்பலி பாடல் நடைபெற்றது. இதில் இறைவார்த்தை, நற்கருணை வழிபாடு மற்றும் இடமாற்ற பவனியை பேராலய அதிபர் இருதயராஜ் நிறைவேற்றினார்.
இதனைத் தொடர்ந்து 12 சீடர்களின் பாதங்களை கழுவிய போராலய பங்குதந்தை அற்புதராஜ் பின்னர் சீடர்களின் பாதங்களில் முத்தி (முத்தம்) செய்தார். இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு தங்களது பிரார்த்தனையை நிறைவேற்றிகொண்டனர். வரும் ஞாயிற்றுகிழமை ஏசு உயிர்த்தெழுந்த தினத்தை உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகின்றனர்.