கொரோனாவை தடுக்க ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள் சுயநலமின்றி பொதுநலத்துடன் நெருக்கடியான சூழலில் களத்தில் இறங்கி மக்களுக்காக உழைத்துவருகின்றனர்.

அந்தவகையில், காவல்துறையினரின் மகத்தான சேவையை பார்த்து, இதற்கு முன் காவல்துறையினர் மீது நல்ல அபிப்ராயம் இல்லாமல் இருந்தவர்கள் கூட, அவர்களின் அர்ப்பணிப்பான உழைப்பை பார்த்து அவர்கள் மீது மதிப்பும் மரியாதையும் வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். காவல்துறையினரின் பணி, மக்களால் பாராட்டை பெற்றுள்ளது. 

இந்நிலையில், நாகை மாவட்டம் சீர்காழியில் விரும்பத்தகாத சம்பவம் ஒன்று நடந்துள்ளது. நாகை  மாவட்டம் சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக பணிபுரிகிறார் ஸ்ரீப்ரியா. அவருக்கு சீர்காழியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பாதுகாப்பு பணி கொடுக்கப்பட்டுள்ளது. இவரது கணவரும் காவல்துறையில் தான் பணிபுரிகிறார். திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி காவல்நிலையத்தில் ஸ்ரீப்ரியாவின் கணவர் சோமசுந்தரம் பணிபுரிகிறார். சோமசுந்தரம் தற்போது மருத்துவ விடுப்பில் இருந்துள்ளார்

இந்நிலையில், கடந்த 11 மற்றும் 12ம் தேதிகளில் போலீஸ் யூனிஃபார்மில் தனது சொந்தக்காரில் கணவர் சோமசுந்தரத்துடன் சென்று சீர்காழியில் தனக்கு பாதுகாப்பு பணி வழங்கப்பட்ட பகுதியில் மளிகைக்கடைகளை மூடுமாறு கட்டாயப்படுத்தியதுடன், திருவெண்காடு காவல் சரத்துக்கு உட்பட்ட மங்கைமடம் பகுதியில் மெடிக்கல் ஒன்றில் தனது கணவர் மூலமாக ரூ.2000 கையூட்டு வாங்கியிருக்கிறார். அதற்கருகிலுள்ள மளிகை மற்றும் பூக்கடைகளிலும் மிரட்டி பணம் வாங்கியிருக்கிறார்.

இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அந்த தகவலை சமூக வலைதளங்களில் பதிவிட, விஷயம் தஞ்சாவூர் சரக டிஐஜி லோகநாதனுக்கு  சென்றது. உடனடியாக இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்ட டிஐஜி லோகநாதன், விசாரணையில் அது உண்மை என தெரியவந்ததையடுத்து ஸ்ரீப்ரியா - சோமசுந்தரம் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.