நாகை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்தவர் பார்வதி. கடந்த சில நாட்களாக இவருக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்திருக்கிறது. காய்ச்சலால் அவதிப்பட்டு வரவே 9ம் தேதி அங்கிருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக பார்வதி சென்றுள்ளார். அங்கு அவரை மருத்துவர் பரிசோதித்த பிறகு செவிலியர் ஒருவர் ஊசி போட்டிருக்கிறார்.

அப்போது ஊசி உடைந்து பார்வதியின் உடலுக்குள் சிக்கியிருக்கிறது. அதுகுறித்து கேட்ட பார்வதியிடம், அப்படி எதுவும் இல்லை என்று மருத்துவமனை ஊழியர்கள் மறுத்துள்ளனர். அதன்பிறகு வலியால் பார்வதி அவதிப்பட்டு வந்திருக்கிறார். இந்தநிலையில் அவரின் வீடு தேடி வந்த மருத்துவர்கள் பார்வதியை சிகிச்சைக்கு அழைத்துச்சென்று ஸ்கேன் எடுத்து பார்த்துள்ளனர். அதில் உடைந்து போன ஊசியின் ஒரு பகுதி பார்வதியின் உடலில் சிக்கியிருந்தது தெரிய வந்தது. நாள் ஆகிவிட்டதால் ஊசி தற்போது உடலில் ஆழமாக சென்றுள்ளது.

சீர்காழியில் இதற்கு சிகிச்சை அளிக்க முறையான வசதிகள் இல்லாததால் சிதம்பரத்தில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்லுமாறு பார்வதியிடம் கூறியுள்ளனர். ஆனால் அந்த அளவிற்கு தன்னிடம் பண வசதி இல்லை என்று பார்வதி வேதனை தெரிவித்துள்ளார். உடனடியாக ஊசியை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் உயிருக்கு ஆபத்தான நிலையில் பெண் ஒருவர் பரிதவித்து வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.