நாகையில் தேர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞர் - முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!
குறிப்பிட்ட பகுதியில் தேருக்கு முட்டுக்கட்டை போடும் போது தேரின் சக்கரம் ஏறி தீபராஜ் என்ற இளைஞர் மீது ஏறியது.
நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது. திருவிழாவின் அங்கமாக தேர் வீதி உலா நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் தேர் இழுக்கும் போது, ஆங்காங்கே அதனை நிறுத்துவதற்காக முட்டுக்கட்டை போடும் பணியில் பலர் ஈடுபட்டு வந்தனர்.
கோயில் திருவிழாவில் அந்த பகுதியின் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேர் புறப்பட்டு சுமார் இரண்டு மணி நேரங்களில் திட்டமிட்ட பாதையில் சென்று கொண்டு இருந்தது. இந்த நிலையில், குறிப்பிட்ட பகுதியில் தேருக்கு முட்டுக்கட்டை போடும் போது தேரின் சக்கரம் ஏறி தீபராஜ் என்ற இளைஞர் மீது ஏறியது. இதில் பலத்த காயமடைந்த தீபராஜை, அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சோகம்:
எனினும், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே தீபராஜின் உயிர் பிரிந்தது. கோயில் திருவிழாவில் தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருத்தம் தெரிவித்து இருக்கிறார். மேலும் உயிரிழந்த தீபராஜ் குடும்பத்தாருக்கு ஐந்து லட்சம் ரூபாயை முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்த வழங்க உத்தரவிட்டுள்ளார்.
நிவாரணம்:
இதுகுறித்து அவர் கூறியதாவது, "நாகப்பட்டினம் மாவட்டம் திருச்செங்காட்டாங்குடியில் இன்று அதிகாலை நடைபெற்ற தேர் திருவிழாவில், தேருக்கு முட்டுக்கட்டை போடும்போது அதிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த திருக்கண்ணபுரத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரின் மகன் தீபராஜ் மீது தேர் சக்கரம் ஏறியதால் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு எடுத்துச்செல்லும் வழியிலேயே உயிரிழந்தார் என்ற துயர செய்தியை கேள்வியுற்று மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என தெரிவித்தார்.
தஞ்சை விபத்து:
சில தினங்களுக்கு முன் தஞ்சை மாவட்டத்தின் களிமேடு தேர் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கியதால் 11 பேர் உயிரிழந்தனர். இதை அடுத்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்று இருக்கும் மற்றொரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.