நாகை மாவட்டம் பெருஞ்சேரியை சேர்ந்தவர் சரணவன். இவரது மனைவி சுமித்ரா. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு கடந்த வாரம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்திருக்கிறது.

இந்த நிலையில் குழந்தையின் வயிறு வீங்கிய நிலையில் இருந்திருக்கிறது. இதையடுத்து குழந்தையை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர். அப்போது குழந்தை கருப்பு நிறத்தில் வாந்தி எடுத்து மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது.

குழந்தையின் பெற்றோரிடம் அதற்கு கொடுக்கப்பட்ட உணவு குறித்து மருத்துவர்கள் விசாரித்து இருக்கின்றனர். நாட்டு வைத்திய முறைப்படி வெற்றிலைச் சாற்றில் பாதரசத்தை கலந்து கொடுத்ததாக பெற்றோர் கூறி இருக்கிறார்கள். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள், உடனடியாக மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அனுப்பி வைத்தனர். அங்கு கடந்த இரண்டு நாட்களாக குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கவனிக்கப்பட்டு வருகிறது.

நாட்டு வைத்தியம் பார்ப்பதாக கூறி குழந்தைக்கு பாதரசத்தை கலந்து கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.