மணல்மேடு கூட்டுறவு நூற்பாலை விரைவில் செயல்பட ஆவண செய்யப்படும்! - கைத்தறித்துறை அமைச்சர் காந்தி பேட்டி!
மணல்மேடு கூட்டுறவு நூற்பாலை இயங்கிய இடத்தில் கலைஞர் பெயரில் கைத்தறி நெசவு தொழிற்சாலை, சூரிய ஒளி மின் உற்பத்தி மற்றும் ஆயத்த ஆடை ஆலை துவங்க கோரிக்கை விடுக்கப்படதன் பேரில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி துறை அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மணல்மேட்டில் 42 ஏக்கரில் 1965-ம் ஆண்டு முதல் இயங்கிவந்த நூற்பாலை 2003-ம் ஆண்டு நஷ்டம் காரணமாக மூடப்பட்டது. ஆலை இயங்கி வந்த இடத்தில் கலைஞர் பெயரில் கைத்தறி நெசவு தொழிற்சாலை, சூரியஒளி மின் உற்பத்தி மற்றும் ஆயத்த ஆடை ஆலை துவங்க மயிலாடுதுறை எம்.எல்.ஏ., ராஜகுமார் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் காந்தியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனை தொடர்ந்து மணல்மேடு நூற்பாலை இயங்கிய இடத்தை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் வந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காந்தி, தமிழ்நாட்டில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் 18 கூட்டுறவு நூற்பாலைகள் இயங்கி வந்தன. தற்போது 6 நூற்பாலைகள் மட்டுமே இயங்கி வருகிறது. ஒவ்வொரு தொழிற்சாலையும் 50 ஏக்கர் மிகாமல் இருக்கின்றது. மணல்மேட்டிலுள்ள இந்த கூட்டுறவு நூற்பாலை 2003-ம் ஆண்டு நிர்வாக காரணங்களால் மூடப்பட்டது.
பெண்கள் மீது வன்கொடுமை.. குறவர் குடியினர் மீது ஆந்திர போலீசின் வன்முறை: விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன்
இத்தொழிற்சாலையின் மொத்தப் பரப்பளவு 40 ஏக்கர் ஆகும். இதில் 5.86 ஏக்கர் அரசு கல்லூரி அமைக்க வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய 34.09 ஏக்கரில் 4 ஏக்கரில் சேதமடைந்த கட்டடங்கள் உள்ளன. இந்த தொழிற்சாலையில் இயக்கத்திற்கு மின் கட்டணசெலவை குறைக்கும் நோக்கில் சூரிய மின் தகடுகள் பொருத்தி செயல்படவும், ஆயத்த ஆடை பூங்கா, கைத்தறி பூங்கா மற்றும் சிறிய அளவில் ஜவுளி பூங்கா அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து மீண்டும் புதுப்பித்து இயக்கினால் இங்குள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பது மட்டுமல்லாமல் இப்பகுதி பருத்தி விவசாயிகளுக்கு விற்பனை செய்ய ஏதுவாக இருக்கும் என்ற எண்ணத்தில் இப்பகுதி சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர், முன்னால் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் எனக்கு கோரிக்கை வைத்தனர்.
அக்கோரிக்கையை ஏற்று இத்தொழிற்சாலையை பார்வையிட்டு ஆய்வு செய்தேன். ஆய்வு செய்ததை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் கலந்தாலோசனை செய்து மிகவிரைவில் இத்தொழிற்சாலையை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.