நாகையில் தலித் இளைஞர் காதலித்து வந்த 18 வயது நிரம்பிய மாணவியை பெற்ற தாயே உயிரோடு எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாகை மாவட்டம் திட்டச்சேரி அடுத்த வாழ்மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (58). இவரது மனைவி உமா மகேஸ்வரி. இவர்களது மகள் ஜனனி (17). அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்தார். இந்த விவகாரம் நாளடைவில் பெற்றொருக்கு தெரியவந்தது. காதலுக்கு பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே காதலை கைவிட மறுத்து காதலனுடன் வெளியூருக்கு செல்ல முயன்ற மகளை பெற்றோர் தேடி கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் காதலனை சந்தித்து மகள் ஜனனி பேசிக் கொண்டிருந்ததை உமா மகேஸ்வரி கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுதொடர்பாக மகளிடம் உமா மகேஸ்வரி கேட்டுள்ளார். அப்போது தாய் பேச்சை கேட்காமல் எதிர்த்து பேசியதால் ஆத்திரமடைந்த உமா மகேஸ்வரி மண்ணெண்ணை எடுத்து மகள் மீது ஊற்றி தீ வைத்து விட்டு தனது உடலிலும் ஊற்றி தீ வைத்து கொண்டார்.

அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து தாய், மகள் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ஜனனி உயிரிழந்தார். தாய் உமா மகஸே்வரி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலை கைவிட மறுத்த மகளை தாயே எரித்து கொன்ற சம்பவம் நாகை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.