ஊர் கட்டுப்பாட்டை மீறி காவல் நிலையத்தை அணுகிய குடும்பம்; ஊரை விட்டு ஒதுக்கி வைத்த நாட்டாமை
நாகை அருகே ஊர் கட்டுப்பாட்டை மீறி காவல் நிலையத்திற்கு சென்ற குற்றத்திற்காக குறிப்பிட்ட குடும்பத்தை ஊர் பஞ்சாயத்தார்கள், கிராமத்தை விட்டு ஒதுக்கி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம், திட்டச்சேரி அடுத்த அகரகொந்தகை மேலத்தெருவைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் வீரையன். இவருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த சுப்புராஜ், ஹரிஷ்குமார், ஸ்ரீகாந்த், நரேஷ்குமார் ஆகியோருக்கு இடையே ப்ளக்ஸ் போர்டு வைப்பதில் தகறாறு ஏற்பட்டு அடி, தடி நடந்துள்ளது. இதனையடுத்து சுப்புராஜ் ஊரில் புகார் கொடுத்துள்ளார். இந்த சண்டை குறித்து ஊர் கிராமத்தினர் முன்னிலையில் இரு தரப்பையும் அழைத்து பஞ்சாயத்து பேசி வீரையனுக்கு 10 ஆயிரம் ரூபாயும், மற்ற நான்கு இளஞர்களுக்கும் சேர்த்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து பிரச்சனை பேசி முடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சண்டையில் காயமடைந்த வீரையன் உடல்நலக்குறைவு ஏற்பட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்ததால் திட்டச்சேரி காவல் துறையினர் புகார் பெற்று இரு தரப்பையும் காவல் நிலையம் அழைத்து விசாரணை செய்து சமரசம் செய்து அனுப்பி வைத்தாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஊர் பஞ்சாயத்தாரை மீறி வீரையன் காவல் நிலையத்தில் புகார் அளித்து விட்டதாக கூறி வீரையனுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட அபராதம் 10 ஆயிரம் ரூபாயுடன் கூடுதலாக 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், சண்டையில் பைக் உடைந்தாக கூறி 60 ஆயிரம் கட்ட வேண்டும் எனவும் இந்த பணத்தை கடந்த 1ம் தேதிக்குள் கட்ட சொல்லி உத்தரவிட்டுள்ளனர்.
இதற்கு வீரையன் காவல் நிலையத்தில் பேசி சமரசம் செய்து விட்டார்கள். ஆதலால் நான் பணம் கட்ட முடியாது என கூறியதாக தெரிகிறது. இதனால் பஞ்சாயத்து கூடி வீரையன் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாகவும், அவர் குடும்பத்தோடு யாரும் பேச கூடாது, விஷேத்திற்கு அழைக்க கூடாது என்று தீர்மானம் போட்டு வீடு, வீடாக அறிவித்துள்ளனர். பஞ்சாயத்தார்கள் ஊரை விட்டு விலக்கி வைப்பதை வீடு, வீடாக சொல்லும் வீடியோவும் தற்போது வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட வீரையன் இன்று காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்து பஞ்சாயத்தை மீறி காவல் நிலையம் சென்றதால் தனது குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக கூறி எஸ்பி ஹர்ஷ் சிங்கிடம் புகார் மனு அளித்தனர். ஊர் பஞ்சாயத்தை மீறி காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து கட்டுப்பாடு போட்டுள்ள சம்பவமும், அதனை வீடு வீடாக சொல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருவதும் நாகையில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.