Viral video : கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு பாக்ஸ் மதுபாட்டில்கள் அபேஸ்! வைரலாகும் சிசிடிவி காட்சிகள்!
மயிலாடுதுறையில் அரசு டாஸ்மாக் மதுபான கடையில் மது பாட்டில்கள் இறங்கி கொண்டிருந்த லாரியில் இருந்து, ஒரு பாக்ஸ் மது பாட்டில்களை இளைஞர்கள் கண்ணிமைக்கும் நொடியில் இருசக்கர வாகனத்தில் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம், திருபுவனத்தில் உள்ள தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் மதுபான மொத்த கிடங்கில் இருந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விற்பனைக்காக மதுபாட்டில்கள் லாரிகளில் வருவது வழக்கம். இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் மகாதானத் தெருவில் அரசுக்கு சொந்தமான 5646 எண் கொண்ட டாஸ்மாக் மதுபானக் கடைக்கு லாரியில் மது பாட்டில்கள் வந்து இறங்கியது.
அதனை ஊழியர்கள் டாஸ்மார்க் கடைக்குள் எடுத்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அதனை நோட்டமிட்டு கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் லாரியிலிருந்து எடுத்து வைக்கப்பட்ட 48 குவாட்டர் பாட்டில் அடங்கிய (பிலாக் பேர்ல்) ஒரு பாக்ஸ் மது பாட்டில்களை குண்டுகட்டாக தூக்கிக் கொண்டு கண்ணிமைக்கும் நொடியில் இருசக்கர வாகனத்தில் சென்று விட்டனர்.
லாரியிலிருந்து ஊழியர் இறங்கி விரட்டி சென்றும் அந்த இளைஞர்களை பிடிக்க முடியவில்லை. திருடி சென்ற 48 மதுபாட்டில்கள் விலை (ஒரு பாட்டில் 130) ரூ 6,140 ஆகும். இது குறித்து தகவல் அறிந்த டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் (சூப்பர்வைசர்) சுரேந்திரன் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில், மயிலாடுதுறை போலீசார் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி பதிவை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இளைஞர்கள் மது பாட்டில்களை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.