மயிலாடுதுறையில் இளைஞருடன் சேர்ந்து மது அருந்திய வீடியோ வெளியானதால் கல்லூரி மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் 4 பேர், கல்லூரி  சீருடையில் இளைஞர் ஒருவருடன் சேர்ந்து மது அருந்தும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த மாணவிகள் மயிலாடுதுறை அருகே உள்ள தனியார் கல்லூரியில் படிப்பவர்கள் என்று தெரியவந்தது.

இதை கண்ட கல்லூரி நிர்வாகம் ஒழுங்கு கட்டுப்பாட்டை மீறியதாக  இளங்கலை 2ம் ஆண்டு படித்து வரும் சம்பந்தப்பட்ட 4 மாணவிகளையும் கல்லூரியை விட்டு நிரந்தரமாக நீக்கி உத்தரவிட்டது. இதனால் வேதனையடைந்த மாணவிகளில் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவரை மீட்ட பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மது அருந்திய வீடியோ வெளியான அவமானத்தால் மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.