நாகையில் சடங்கு, சம்பிரதாயங்களை உடைத்துதெறிந்த விதவை பெண்கள்; பூச்சூடியும், பொட்டு வைத்தும் மகிழ்ச்சி
விதவைப் பெண்கள் பொட்டு வைக்கக் கூடாது, பூ வைக்கக் கூடாது என்ற மூடநம்பிக்கையை உடைத்தெறிந்த நாகை பெண்கள் பொட்டு வைத்தும், பூச்சூடியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
நாகப்பட்டினத்தில் இன்று உலக கைம்பெண்கள் தின எழுச்சி மாநாடு நடைபெற்றது. தமிழக விதவைப் பெண்கள் வாழ்வுரிமை சங்கம் சார்பில் நடைபெற்ற மாநாட்டில், கணவனால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் விதவைப் பெண்கள் 500க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர். முன்னதாக நாகை அவுரித்திடலில் இருந்து பேரணியாக மாநாட்டு மண்டபத்திற்கு சென்றனர்.
அப்போது கைம்பெண்கள் உரிமை, உதவி தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்ளை எழுப்பினர். அதனைத் தொடர்ந்து மாநாட்டு மேடையில் வலியை, வலிமையாக்கி இழந்த பூவையும், பொட்டையும் வைத்துக் கொள்ள மேடைக்கு வாருங்கள் என அச்சங்கத்தின் மூத்த பெண்மணி ஒருவர் அழைப்பு விடுத்தார்.
அதனை தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட கைம்பெண்கள், ஒவ்வொருவராக மேடை ஏறி, அங்கு தலையில் பூச்சூடி, நெற்றியில் பொட்டு வைத்து, சடங்கு சம்பிரதாயங்களை உடைத்தெறிந்து புரட்சி செய்தனர். இந்த நிகழ்வின் போது பூவையும், பொட்டையும் ஏக்கத்துடன் பார்த்த கைம்பெண்கள் சிலர், அதனை கையில் எடுத்து தங்களின் உரிமைகள் நிலைநீட்டப்பட்டதாக எண்ணி, சிங்கப்பெண்கள் போல் மனம் சிலிர்த்தனர்.
நாகையில் நடைபெற்ற உலக கைம்பெண்கள் தின எழுச்சி மாநாட்டில், சாஸ்திர, சம்பிரதாயங்களை உடைத்தெறிந்து, கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கும், விதவைகளுக்கும், தலையில் பூச்சூடி, நெற்றியில் பொட்டு வைத்து நடனமாடி உற்சாகமாக கொண்டாடிய ருசிகர சம்பவம், அனைவர் மத்தியிலும் ஆச்சரியத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.