ஒரே நாளில் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட 70 வயது மூதாட்டி... தற்போது நிலைமை என்ன?
2 தடுப்பூசி போடுவார்கள் என்று நினைத்து அலமேலுவும் வரிசையில் சென்றுள்ளார். அப்போது அவருக்கு மீண்டும் தடுப்பூசி போடப்பட்டது. இதையடுத்து சுகாதார பணியாளர்கள் பதிவு செய்தபோது பாட்டிக்கு 2வது முறையாக தடுப்பூசி போட்டது தெரியவந்தது.
வேதாரண்யம் அருகே ஒரே நாளில் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட மூதாட்டியை அரசு மருத்துவமனையில் வைத்து மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வண்டுவாஞ்சேரி சரபோஜி ராஜபுரத்தில் உள்ள ஒரு பள்ளியில் நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இந்த முகாமில் 100 நாள் திட்ட பணியாளர்கள் கூட்டம் கூட்டமாக வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதில், வேதாரண்யம் தாலுக்கா வண்டுவஞ்செரி கிராமம் பெரிய திடல் பகுதியை சேர்ந்த நாகப்பன் மனைவி அலமேலு(70) என்பவர் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டு கொண்டார். இதையடுத்து முகாம் நடந்த இடம் அருகே உள்ள மரத்தடியில் அலமேலு அமர்ந்திருந்தார்.
அப்போது ஆண்கள் வரிசையில் கூட்டம் குறைவாக இருந்ததால் அந்த வரிசையில் பெண்களும் சென்று தடுப்பூசி போட்டு கொள்ளுங்கள் என்று அங்கு நின்ற ஒரு சிலர் கூறினர். ஏற்கனவே ஊசி போட்டது தெரியாமல் மரத்தடியில் அமர்ந்திருந்த அலமேலுவையும் அங்கிருந்தவர்கள் அனுப்பி வைத்தனர். 2 தடுப்பூசி போடுவார்கள் என்று நினைத்து அலமேலுவும் வரிசையில் சென்றுள்ளார். அப்போது அவருக்கு மீண்டும் தடுப்பூசி போடப்பட்டது. இதையடுத்து சுகாதார பணியாளர்கள் பதிவு செய்தபோது பாட்டிக்கு 2வது முறையாக தடுப்பூசி போட்டது தெரியவந்தது.
இதனையடுத்து, மூதாட்டியை அரசு மருத்துவமனையில் அனுமதித்து அவரது உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தற்போது, அவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதால் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.