தருமபுர ஆதீனத்தின் 27வது குருமகா சன்னிதானம் ஞானபீடம் ஏற்பு..!
தருமபுர ஆதீனத்தின் 27வது குருமகா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் இன்று பொறுப்பேற்றார்.
நாட்டின் பழமையான சைவ மடங்களில் ஒன்று தருமபுரம் ஆதீன மடமாகும். தருமபுர ஆதீனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 27 சிவாலயங்கள் இருந்து வருகின்றன. மயிலாடுதுறையில் அமைந்திருக்கும் இம்மடத்தின் ஆதீனமாக 26வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் இருந்து வந்தார். 96 வயதான அவர், கடந்த வாரம் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்.
ஆதீன முறைப்படி அவருக்கு இறுதிச்சடங்குகள் நடந்தன. அதன்பிறகு ஆதீன மடத்தின் புதிய சன்னிதானம் பொறுப்பேற்கும் நிகழ்வுகள் தொடங்கின. இளைய சன்னிதானமாக இருந்த ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் ஆதீனத்தின் 27வது குருமகா சன்னிதானமாக தேர்வு செய்யப்பட்டார். அதன்படி தருமபுர ஆதினமடத்தின் புதிய சன்னிதானமாக இன்று அவர் பொறுப்பேற்றுக்கொண்டார். ஆதீன முறைப்படி நடைபெற்ற பூஜைகளுக்கு பிறகு ஞான பீடத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
இவர் கடலூா் மாவட்டத்தில் இருக்கும் எருக்கத்தம்புலியூரில் மறைஞானசம்பந்தம் பிள்ளை - அலா்மேல்மங்கை தம்பதியரின் மகனாக கடந்த 1965ல் பிறந்தார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ பட்டமும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞா் பட்டத்தையும் பெற்றிருக்கிறார். மேலும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முனைவா் பட்டத்தையும் நிறைவு செய்துள்ளார்.