மதுரையில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை முனிச்சாலை பகவத்சிங் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் ஜெயலட்சுமி (24). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த பாண்டிகுமார் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் ஜெயலட்சுமியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால், இவர்களது காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால், சில நாட்களாக ஜெயலட்சுமி மனமுடைந்து காணப்பட்டு வந்தார். மேலும் வெளியில் செல்வதற்கு கட்டுப்பாடு விதித்தனர். இதனால் விரக்தியடைந்த ஜெயலட்சுமி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை, கண்ட பெற்றோர் மகளின் உடலை பார்த்து கட்டி அனைத்து கதறினர்.  

இதனையடுத்து, உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜெயலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.