பயணிகள் திக்..திக்...திகில்...! கியர் கம்பிக்கு பதிலாக மரக்குச்சியை நுழைத்து இயக்கிய ஓட்டுநர்..!
மதுரையில் கியர் கம்பிக்கு பதிலாக மரக்குச்சியை வைத்து அரசு பேருந்து இயக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் கியர் கம்பிக்கு பதிலாக மரக்குச்சியை வைத்து அரசு பேருந்து இயக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் பேருந்துகள் சரியாக பராமரிப்பு இல்லாமல் இருந்து வருவதால் அடிக்கடி விபத்தில் சிக்குவது வழக்கமான நிகழ்வாக இருந்து வருகிறது. இந்நிலையில், மதுரை மாவட்டம் மேலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் 53 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றனர். இதில், பெரும்பாலான பேருந்துகள் ஓட்டை, உடைசல்களாகவே உள்ளன. மேலூரில் இருந்து சேக்கிபட்டிக்கு செல்லும் அரசு பேருந்து நிலை மோசமாக உள்ளது. அதன் மேற்கூரை பலத்த சேதம் அடைந்து உள்ளது. கியர் போடுவதற்கான இரும்பு கம்பி உடைந்து போய்விட்டது.
இதனால், மரக்குச்சியை நுழைத்து கயிற்றால் கட்டி வைத்து அந்த பேருந்து ஆபத்தான முறையில் இயக்கப்படுகிறது. பேருந்து செல்லும் போது மரக்குச்சி கழன்று விழாமல் இருக்க ஒரு பயணி ஒருவர் குச்சியை பிடித்துக்கொண்டு செல்கிறார். அந்த மரக்குச்சி கியரை புகைப்படம் எடுத்து பயணி ஒருவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகின்றது.
சமீபத்தில் பொள்ளாச்சி அருகே பலத்த காற்று காரணமாக அரசு பேருந்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. அதேபோல் அரசு பேருந்தின் பின்புறம் 4 டயர்கள் பொருத்தப்படுவதற்கு பதிலாக 2 டயர்கள் மட்டுமே பொருத்தப்பட்டு இயக்கப்பட்டது. இதனால், அரசு பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்கள் அச்சத்துடனே உள்ளனர். எனவே இதுபோன்ற பேருந்துகளை மாற்றிவிட்டு புதிய பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.