மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் சதாசிவம். இவரது மனைவி சரோஜா. சதாசிவம் நூலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கிறார். இவர்களுக்கு திருமணம் முடிந்து 50 வருடங்கள் ஆகிறது. இந்த தம்பதிகளுக்கு சுதாகர், பாஸ்கர், பிரபாகரன் என்ற 3 மகன்கள் இருக்கின்றனர்.

சரோஜா தனது கணவர் மீது மிகுந்த பாசத்தோடு இருந்திருக்கிறார். அவருக்கு சிறியதாக காய்ச்சல் ஏற்பட்டால் கூட மிகுந்த வருத்தத்தில் இருப்பார் என்று கூறப்படுகிறது. தனது கணவருக்கு ஏதாவது ஆகிவிட்டால் நானும் அவருடனே சென்று விடுவேன் என்று அடிக்கடி கூறி வந்திருக்கிறார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்திருக்கிறார் சதாசிவம். இதற்காக அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வந்திருக்கிறார். கணவருக்கு உடல்நிலை சரியில்லையே என்று சரோஜாவும் வருத்தமாக காணப்பட்டிருக்கிறார்.

இந்த நிலையில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த சதாசிவம் நேற்று இறந்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சரோஜா கணவர் உடலை பார்த்து கதறி அழுதிருக்கிறார்.இந்த நிலையில் அதிகமான சோகத்தில் இருந்த சரோஜா நேற்று இரவு திடீரென்று உயிரிழந்தார். இதனால் அவர்களது 3 மகன்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். இதையடுத்து தாய், தந்தை இருவருக்கும் ஒரே நேரத்தில் இறுதி சடங்குகள் செய்ய ஏற்பாடு செய்தனர்.

கணவர் இறந்து போன நேரத்தில் மனைவியும் உயிரிழந்தது உறவினர்களிடம் மட்டுமில்லாது அந்த பகுதி மக்களிடையேயும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சாவிலும் இணை பிரியா தம்பதிகள் என அவர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.