Whatsapp Group Admin:அலர்டா இருங்க அட்மின்களே.. வாட்ஸ்அப் குழுக்களில் வரும் மெசேஜ்களுக்கு அட்மின்கள் பொறுப்பா?
வாட்ஸ் அப் என்பது உடனடி தகவல் பரிமாற்ற தளமாக உள்ளது. குழு பல உறுப்பினர்களைக் கொண்டு இயங்குகிறது. குரூப்பை உருவாக்குவது, உறுப்பினர்களை சேர்ப்பது, நீக்குவது உள்ளிட்டவை அட்மினின் பணி. ஒவ்வொரு குரூப்பிலும் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட சிலரோ அட்மின்களாக உள்ளனர்.
வாட்ஸ் அப்பில் உள்ளவர்கள் தவறான கருத்துக்களை பதிவு செய்தால், அதற்கு வாட்ஸ் அப் குரூப் அட்மின் பொறுப்பாக முடியாது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்: கரூர் வழக்கறிஞர்கள் என்ற பெயரிலான வாட்ஸ் அப் குரூப் துவக்கி அட்மினாக உள்ளேன். இந்த குரூப்பிலுள்ள ஒருவர் இரு சமூகங்களுக்கு இடையே பிரச்னைக்குரிய வகையில் செய்தியை பதிவிட்டுள்ளார். இதுதொடர்பான புகாரின் பேரில், கரூர் தாந்தோன்றிமலை போலீசார் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துதல்(153ஏ), பொது இடத்தில் ஆபாசமான வார்த்தையை பயன்படுத்துதல் (294பி) உள்ளிட்ட பிரிவுகளில் என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நான் வாட்ஸ் அப் குரூப்பின் அட்மின் மட்டுமே. வேறொருவரின் பதிவிற்கு என் மீது வழக்கு தொடர முடியாது. சம்பந்தப்பட்ட நபரை எனது வாட்ஸ் அப் குரூப்பில் இருந்து நீக்கிவிட்டேன். எனவே, என் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
அதில், வாட்ஸ் அப் என்பது உடனடி தகவல் பரிமாற்ற தளமாக உள்ளது. குழு பல உறுப்பினர்களைக் கொண்டு இயங்குகிறது. குரூப்பை உருவாக்குவது, உறுப்பினர்களை சேர்ப்பது, நீக்குவது உள்ளிட்டவை அட்மினின் பணி. ஒவ்வொரு குரூப்பிலும் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட சிலரோ அட்மின்களாக உள்ளனர். குழு உறுப்பினர்களின் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பணி அட்மினை சேர்ந்தது. அவர் குறிப்பிட்ட பணிகளையே செய்ய முடியும்.
பதிவுகளை முறைப்படுத்தவோ, மாற்றியமைக்கவோ, தணிக்கை செய்யவோ முடியாது. ஆனால், உறுப்பினர்களின் ஆட்சேபத்திற்குரிய பதிவு சட்டத்திற்கு உட்பட்டவையே. உறுப்பினரின் பதிவிற்கு அட்மின் பொறுப்பாக முடியாது என ஒரு வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மனுதாரர் அந்த குரூப்பின் அட்மின் மட்டுமே. அவர் பதிவிடவில்லை என்பது உறுதியானால், வழக்கில் மனுதாரரின் பெயரை நீக்கி இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். முடிவு அடிப்படையில் போலீசாருக்கு போதுமான ஆவணங்கள் கிடைத்தால் மனுதாரரை வழக்கில் சேர்க்க வேண்டும். வழக்கை மனுதாரர் எதிர்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.