மதுரை கப்பலூர் அருகே சுங்கச்சாவடி ஒன்று இருக்கிறது. நேற்று சென்னையை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் சிலர் சபரிமலைக்கு சென்று விட்டு கப்பலூர் சுங்கச்சாவடி வழியாக வந்துள்ளனர். அப்போது அங்கு வாகனங்கள் அதிகளவில் இருந்துள்ளது. இதனால் அய்யப்ப பக்தர்கள் வந்த வாகனத்தின் ஓட்டுநர் முதல் கேட் வழியாக சென்றுள்ளார். அது பாஸ்ட் டேக் உபயோகிப்பவர்களுக்கான வழி என்று கூறப்படுகிறது. அதனால் இருமடங்கு கட்டணத்தை செலுத்த வேண்டும் என டோல் கேட் ஊழியர்கள் கேட்டுள்ளனர்.

ஆனால் ஜனவரி 15 தேதி முதல் தான் பாஸ்ட் டேக் கட்டணங்கள் நடைமுறைக்கு வருகிறது. அதற்குள்ளாக ஏன் இருமடங்கு கட்டணம் வசூலிக்கீறீர்கள்? என அய்யப்ப பக்தர்கள் கேட்டுள்ளனர். அப்போது சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் அய்யப்ப பக்தர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஏன் இப்படி செய்கிறீர்கள்? நீங்கள் இந்தியர் தானே? என்று ஒரு அய்யப்ப பக்தர் கேட்க, 'இல்லை நான் பாகிஸ்தான் காரன்'.. என டோல் கேட் ஊழியர் திமிராக பதிலளித்துள்ளார்.

வாக்குவாதம் முற்றவே இருதரப்பிற்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. டோல் கேட் ஊழியர்கள் சேர்ந்து தாக்கியதில் 3 அய்யப்ப பக்தர்கள் படுகாயமடைந்தனர். அய்யப்ப பக்தர்களின் மாலையை அறுத்தெறிந்து டோல் கேட் ஊழியர்கள் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அய்யப்ப பக்தர்கள் சார்பாக திருமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் வழக்கு பதியப்பட்டு 4 டோல் கேட் ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

நடைமுறைக்கே வராத பாஸ்ட் டேக் முறையில் இருமடங்கு கட்டணத்தை உயர்த்தி கேட்டதுடன், அய்யப்ப பக்தர்களையும் தாக்கிய டோல் கேட் ஊழியர்களால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.