தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வந்தது. இதனால் மாநிலத்தில் இருக்கும் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து நீர்மட்டம் வேகமாக உயரத்தொடங்கியது. பல அணைகள் நிரம்பி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. சென்னையிலும் பலத்த மழை பெய்ததால் ஏரிகள் நிரம்பத் தொடங்கின. சென்னையின் நிலத்தடி நீர்மட்டம் அளவும் உயர்ந்துள்ளதாக அரசு தெரிவித்தது.

கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தில் மழையின் தீவிரம் குறைந்திருந்தது. திருநெல்வேலி,மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்துவந்தது. இந்தநிலையில் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் ஏற்கனவே எச்சரித்திருந்தது. இன்று 5 மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாளைக்கு கனமழை பெய்ய இருக்கிறது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலையில் இருந்தே சென்னையில் மழைக்கான அறிகுறிகள் தென்படுகிறது.