இதுதான் முதலும் கடைசியுமாக இருக்கட்டும்.. இது போன்ற சம்பவம் இனிமேல் நடக்கக் கூடாது... உயர்நீதிமன்றம் அதிரடி.!
எந்தவித ஆயுதமும் இன்றிப் போராடிய பொதுமக்கள் மீது, துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறக் கூடாது என்றனர். மேலும், தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வுப் பிரிவு அறிக்கை மற்றும் தமிழக முதன்மைச் செயலாளர் அறிக்கை இரண்டையும் சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய வேண்டும்.
தூத்துக்குடியில் எந்தவித ஆயுதமும் இன்றி போராடிய பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கூறியுள்ளது.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹென்றி திபேன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தூத்துக்குடி மாவட்டம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018-ல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 நபர்கள் உயிரிழந்தனர். தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்தது. இதுகுறித்து, தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. மேலும், தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வுப் பிரிவு இச்சம்பவம் குறித்து நேரடியாக தூத்துக்குடி சென்று விசாரணை மேற்கொண்டது. அதன் அறிக்கையை, தேசிய மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்தது.
இந்நிலையில், தமிழக முதன்மைச் செயலாளர் தரப்பில், செப்டம்பர் 2018-ல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், தேசிய மனித உரிமை ஆணையம் அக்டோபர் 2018-ல் வழக்கை முடித்துவைத்தது. தேசிய மனித உரிமை ஆணையப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணை குறித்து, எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இது ஏற்கத்தக்கதல்ல. எனவே, இந்த வழக்கை மீண்டும் தேசிய மனித உரிமை ஆணையம் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், எந்தவித ஆயுதமும் இன்றிப் போராடிய பொதுமக்கள் மீது, துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறக் கூடாது என்றனர். மேலும், தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வுப் பிரிவு அறிக்கை மற்றும் தமிழக முதன்மைச் செயலாளர் அறிக்கை இரண்டையும் சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு குறித்து தேசிய மனித உரிமை ஆணையம், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்து, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வுக்கு வழக்கை மாற்றம் செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.