‘சொன்னதை மட்டும் அல்ல சொல்லாததையும் செய்வான் இந்த ஸ்டாலின்’ - முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு
சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்வான் இந்த ஸ்டாலின் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் சென்னையில் மருத்துவமனையும், மதுரையில் இந்த நூலகமும் என்று கூறியுள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் (சனிக்கிழமை) மதுரை புதுநத்தம் சாலையில் அமைந்துள்ள பொதுப் பணித் துறை வளாகத்தில் தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார். பிறகு பேசிய அவர், "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியின் இரு கண்கள் என நான் அடிக்கடி சொல்வது, கல்வியும் சுகாதாரமும்தான். அதனால் தான், கலைஞர் நூற்றாண்டு தொடக்கமான கடந்த ஜூன் மாதம் 15-ஆம் தேதி அன்று கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையை சென்னை, சைதாப்பேட்டை, கிண்டியில் திறந்து வைத்தேன்.
ஒரு மாதம் கழித்து ஜூலை 15-ஆம் நாளான இன்றைக்கு கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை மதுரையில் திறந்து வைத்திருக்கின்றேன். சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்வான் இந்த ஸ்டாலின் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் சென்னையில் மருத்துவமனையும், மதுரையில் இந்த நூலகமும். இவை இரண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் அளிக்காத வாக்குறுதிகள் ஆகும்.
தமிழ்நாட்டினுடைய தலைநகர் சென்னை என்றால், இந்த மதுரை, தமிழ்நாட்டினுடைய கலைநகர். தலைநகரில், தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டில், அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அமைத்துத் தந்தார் அவர் தம்பி கலைஞர். இன்று அந்த தலைவர் கலைஞரின் நூற்றாண்டில், இந்தக் கலைநகரில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் எனும் தென் தமிழ்நாட்டின் அறிவாலயத்தை இந்த அடியேன் அமைத்திருக்கிறேன்.
இந்த நூலகத்தை திறந்து வைக்கக்கூடிய பெரும் வாய்ப்பும், பெருமையும் எனக்கு கிடைத்திருப்பதை எண்ணி எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த இந்த மாமதுரையில் சங்ககால இலக்கியங்களை சாமானியருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் சங்கத்தமிழ் இயற்றிய மாமதுரையில் நூலகம் வைக்காமல் வேறு எங்கு வைக்க முடியும். சிலப்பதிகாரம் குறித்தும் காற்சிலம்போடு நீதி கேட்ட கண்ணகி குறித்தும் கலைஞர் தீட்டாத எழுத்து ஓவியங்கள் இல்லை.
‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என அறச்சீற்றம் கொண்டு கண்ணகி எரித்திட்ட இந்த நகரத்தில் லட்சக்கணக்கான நூல்கள் கொண்ட இந்த நூலகத்தினால் அறிவுத் தீ பரவப் போகிறது. திராவிட இயக்கம் என்றாலே அறிவியக்கம்தான். படிப்பகங்களால் வளர்ந்து, ஆட்சிப் பொறுப்புக்கு வந்து இன்று பிரம்மாண்டமான நூலகங்களை கட்டியெழுப்பிக் கொண்டு இருக்கிறோம்.
வெறும் ரூ.133 போடுங்க.. உங்களுக்கு 3 லட்சம் கிடைக்கும் - அதிக லாபம் தரும் போஸ்ட் ஆபிஸ் திட்டம்
2 லட்சத்து 13 ஆயிரத்து 338 சதுர அடி பரப்பளவில், 120 கோடியே 75 இலட்ச ரூபாய் மதிப்பில் இந்த கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை அழகாகவும், அற்புதமாகவும் உருவாக்கிக் கொடுத்த எதிலும் வல்லவர் என்று அழைக்கப்படும், நம்முடைய பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுயும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியையும் நான் மனதார பாராட்டுகிறேன்.
பொதுப்பணி மற்றும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் உள்ளிட்ட இந்த நூலகம் இவ்வளவு பிரம்மாண்டமாக அமைய கடுமையாக உழைத்திருக்கக் கூடிய கடைக்கோடி மனிதர்கள் வரை அத்தனை பேருக்கும் என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
பொறுப்பேற்று இருக்கின்ற கடமையையும் தாண்டி, உள்ளார்ந்த அக்கறையும் ஆர்வமும், ஒவ்வொருவருக்கும் இருந்தால்தான் இவ்வளவு நேர்த்தியாக ஒன்றை உருவாக்க முடியும். இதையெல்லாம் தாண்டி, தமிழினத் தலைவர் கலைஞர் மேல் வைத்திருக்கின்ற அன்பின் வெளிப்பாடுதான் இந்த நூலகம்" என்று பேசினார்.
Rajinikanth : ஜூலை 13 ஏன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு முக்கியமான நாள் தெரியுமா?