ஆணவ கொலைக்கு முற்றுப்புள்ளி வைக்கணும்... யோசனை சொல்லும் திருமா ...
தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் நடக்கும் ஆணவப் படுகொலைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வருக்கு திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் நடக்கும் ஆணவப் படுகொலைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வருக்கு திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேட்டுப்பாளையம், நெல்லை, திருச்சி என கடந்த 10 நாட்களில் மட்டும் தமிழகத்தில் மூன்று சாதி ஆணவப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இதுதொடர்பாக விளக்கமளித்த முதல்வர், அனைத்து ஆட்சிகளிலும் ஆணவப் படுகொலைகள் நடைபெறுகின்றன. இதைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், முதல்வரின் கருத்து தொடர்பான கேள்விக்கு, அதிமுக ஆட்சியில் மட்டுமே ஆணவப் படுகொலைகள் நடக்கின்றன என யாரும் குற்றம்சாட்டவில்லை. தமிழகத்தில் மட்டுமே இது நடக்கிறது என்றும் நான் சொல்லவில்லை. இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ஆணவப் படுகொலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.
சமீப காலமாக தமிழகத்தில் சாதிய, மதவாத காரணங்களால் அது அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க வேண்டும் என்ற எங்களின் கோரிக்கையை முதல்வர் கவனத்தில்கொள்ள வேண்டும். மத்திய அரசோடு இணைந்து முதல்வர் இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தார்.
8 வழிச் சாலை திட்டம் தொடர்பாகப் பேசியவர், 8 வழிச் சாலை மத்திய அரசின் திட்டம் என்பது அனைவருக்கும் தெரியும். மக்களின் கருத்துகளைக் கேட்டறிந்து இதை நிறைவேற்ற வேண்டுமே தவிர, திணிக்கக் கூடாது. இந்தத் திட்டத்தை ஒட்டு மொத்த தமிழகமே எதிர்க்கிறது. எனவே, பொதுமக்களுக்கு முதல்வர் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.