தனியார் மயமாக்கும் உள் நோக்கில் பணியார்கள் நிரப்பப்படாததே ரயில் விபத்திற்கு காரணம்! - தொல் திருமாவளவன் சாடல்!
அரசு ரயில்வே துறையை தனியாருக்கு ஒப்படைக்க வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு செயல்பட்டதன் விளைவாகத்தான் புதிய பணியாளர் நியமனம் போன்றவற்றை செய்யவில்லை, அதனால்தான் இந்த கோர விபத்து ஏற்பட்டிருக்கிறது என்கிற தார்மீக கருத்தை ஏற்று குறைந்தபட்சம் ரயில்வே துறை அமைச்சராவது பதவி விலக வேண்டும். -தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்: ஒரிசா ரயில் விபத்தில் 300 பேர் பலியாகி உள்ளார்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள தலைகுணிவு, கவாச் என்கிற கவாச் பாதுகாப்பு நவீன தொழில்நுட்ப கருவியை போதுமான அளவு முறையாக பயன்படுத்தியிருந்தால் இந்த விபத்தை தவிர்த்திருக்க முடியும் என்ற தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்திய ஆட்சியாளர்கள் மக்கள் நலனை கருத்தில் கொள்வதை விட, மக்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்துவதை விட வெறுப்பு அரசியலை விதைப்பதில், இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் எதிரான வன்முறைகளை தூண்டுவது, ஜெய் ஸ்ரீ ராம் முழக்கம் எழுப்புவதில் கவனம் செலுத்துகின்றனர்.
அரசு துறைகளை எல்லாம் கார்ப்பரேட் மையமாக வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகின்றனர். ரயில்வே துறையை தனியார் மையம் ஆக்குவது அவர்கள் செயல் திட்டத்தில் ஒன்றாக உள்ளது. அதனால் புதிய பணியாளர்கள் நியமனம் என்பதே இல்லை, ரயில்வே துறையில் தேவையான பணியாளர்களை தொழில்நுட்ப வல்லுனர்களை நியமனம் செய்திருந்தால் இப்படி ஒரு கோர விபத்து நடவாமல் தடுத்திருக்க முடியும் என்றும் கருத்துக்கள் எழுகின்றன. மிக முக்கியமான அனைத்து துறைகளையும் தனியாருக்கு தாரை வார்க்க வேண்டும் என்கிற கொள்கையை கொண்டிருக்கும் மோடி அரசு ரயில்வே துறையை தனியாருக்கு ஒப்படைக்க வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு செயல்பட்டதன் விளைவாகத்தான் புதிய பணியாளர் நியமனம் போன்றவற்றை செய்யவில்லை, அதனால்தான் இந்த கோர விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த தார்மீக கருத்தை ஏற்று குறைந்தபட்சம் ரயில்வே துறை அமைச்சராவது பதவி விலக வேண்டும். எனவே அமைச்சர் பதவி விலகி விட்டு முழுமையான காரணங்களை கண்டறிவதற்கான புலன் விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த கோர விபத்து நடந்த உடன் உடனடியாக தமிழக அரசு உடனடியாக நடவடிக்கையில் ஈடுபட்டது பாராட்டுதலுக்குரியது. அந்த நாளை துக்க நாளாக அறிவித்தது மட்டுமில்லாமல் கலைஞரின் நூற்றாண்டு துவக்க நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு இரண்டு அமைச்சர்களை ஒடிசா அனுப்பியதோடு அதிகாரிகள் குழுவையும் அனுப்பி ஒடிசா மாநில அரசோடு இணைந்து மீட்பு பணியில் ஈடுபடும் நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறார் என்கிற நிலைப்பாடு பாராட்டுதலுக்குரியது. இந்தியா ஆட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் இந்த விபத்து நடந்துள்ளது இந்த விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.