இனிதே நிறைவு பெற்ற சித்திரை திருவிழா! - மீண்டும் அழகர்மலைக்கு வந்தடைந்தார் கள்ளழகர்!
சித்திரை திருவிழா முடித்துவிட்டு மீண்டும் அழகர் கோவிலுக்கு வந்தடைந்தார் கள்ளழகர். மலைக்கோவிலுக்குள் நுழைந்த கள்ளழகரை திரளான பக்தர்கள் கண்டு வழிபட்டனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உலக பிரசித்திபெற்ற அழகர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஆலயத்தில் இருந்து மூன்றாம் தேதி தங்க பல்லக்கில் கள்ளழகர் மதுரைக்கு புறப்பட்டார்.
அதனை தொடர்ந்து மே 5ம் தேதி தங்க குதிரை வாகனத்தில் பச்சை பட்டுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளினார். அதன் பிறகு ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி உற்சவம் வெகுச்சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து, கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தல், தசாவதாரம், பூப்பல்லாக்கு உள்ளிட்ட பல்வேறு வைபவங்களை முடித்துவிட்டு மீண்டும் அழகர் மலை நோக்கி திரும்பினார்.
இன்று காலை 10 மணிக்கு மேல் கோவிந்தா கோஷம் முழங்க பக்தர்கள் புடை சூழ மீண்டும் அழகர் மலைக்கு தங்க பல்லக்கில் கள்ளழகர் வந்தடைந்தார். அப்போது கள்ளழகருக்கு பூக்களை தூவி பக்தர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது, கள்ளழகருக்கு 21 பூசணிக்காய் மூலம் திருஷ்டி சுத்தி கழிக்கப்பட்டது.
தொடர்ந்து அங்கிருந்து கோவிந்தா கோஷம் முழங்க தன் இருப்பிடமான அழகர் கோவிலுக்கு ஆலயத்திற்குள் சென்றடைந்தார். நாளை உற்சவ சாந்தி உடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது