மதுரை ரயில்வே விளையாட்டு மைதானம் மீட்பு - சு.வெங்கடேசன் எம்.பி. பெருமிதம்!
மதுரை ரயில்வே விளையாட்டு மைதானத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக சு.வெங்கடேசன் எம்.பி. பெருமிதம் தெரிவித்துள்ளார்
மதுரை ரயில்வே மைதானம் மீட்கப்பட்டதற்கான வெற்றி விழா கூட்டம் அரசரடி ரயில்வே மைதானம் முன்பு அரசரடி இரயில்வே விளையாட்டு மைதானம் மற்றும் நில பாதுகாப்புக்குழு தலைவர் பி.பால்சாமி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கலந்து கொண்டு அங்கு உள்ளவர்களுக்கு இனிப்புகளை வழங்கி வாழ்த்தி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது: “மதுரை ரயில்வே மைதானம் மதுரையினுடைய சொத்து மட்டுமல்ல, விளையாட்டு வீரர்களுக்கு இதயம் போன்ற ஒரு இடம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இரயில்வே மைதானங்களை தனியாருக்கு தர ரயில்வே வாரியம் முடிவு செய்தது. இதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் பேசினேன். “பி டி உஷா ஓடிய தடம், எம் எஸ் தோனி ஆடிய களம் இந்தியாவின் இரயில்வே மைதானங்கள் அதனை தனியாருக்குத் தர அனுமதிக்க மாட்டோம்” என்று கூறினோம்.
இந்தியா முழுவதும் 40 க்கும் மேற்பட்ட ரயில்வே மைதானங்கள் தனியாருக்கு கொடுக்க முயற்சி நடைபெற்றது. அப்போது அதில் மதுரை ரயில்வே மைதானம் இல்லை. ஆனால் அதன்பிறகு மதுரை ரயில்வே மைதானத்தையும் தாரைவார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அரசரடி ரயில்வே மைதானம் 12 ஏக்கர். இன்றைக்கு இதன் சந்தை மதிப்பு பல நூறு கோடி இருக்கும். இதனை பாதுகாக்க உடனடியாக தலையீடு செய்தோம். தொடர்ந்து இரண்டு மிகப்பெரிய இயக்கங்கள் நடத்தினோம், அதில் முதலாவதாக கையெழுத்து இயக்கம். அதில் முதல் கையெழுத்தை சட்டமன்ற உறுப்பினர் கோ. தளபதி அவர்கள் போட்டுத் துவக்கி வைத்தார். அதன் பின் மதுரையில் உள்ள சுமார் ஒரு லட்சம் மக்கள் கையெழுத்திட்டுள்ளார்கள்.
அந்த ஒரு லட்சம் கையெழுத்துகளும் மைதானத்திற்கு தொடர்பு இல்லாதவர்கள் என்று யாரையும் சொல்ல முடியாது. இந்த ரயில்வே மைதானத்தில் பல்லாண்டுக் காலமாக நடைபயிற்சி மேற்கொண்டவர்கள் மற்றும் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து விளையாட்டு வீரர்களும் கையெழுத்திட்டார்கள். பின்னர் இரண்டாவது முறை 5 ஆயிரம் வீரர்கள் கலந்துகொண்ட "மாரத்தான் அல்ல மதுரைக்காகத்தான்" என்ற விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது. இதற்காக முயற்சி எடுத்துக்கொண்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இதில் எவ்வளவு பேர் உணர்வுபூர்வமாக ஈடுபட்டார்கள் என்று தெரியும். இந்த ரயில்வே நிலம் தனியார் முதலாளிகளுக்கு கொடுக்கும் திட்டத்தைக் கைவிடக்கோரி நாடாளுமன்றத்தின் கடைசி நாள் ரயில்வே அமைச்சரை சந்தித்தேன். அப்போது அவரிடம் “ மதுரை ரயில்வே மைதானத்தை தனியாருக்கும் கொடுக்கும் முயற்சி கைவிட வேண்டும்” என்று கூறினேன். இந்த பிரச்சனையில் தலையீடு செய்கிறேன் என்று கூறினார்.
கடந்த வாரம் மதுரையில் நடைபெற்ற மதுரை மண்டல ரயில்வேயின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கானக் கூட்டத்திற்கு வந்திருந்த தென்னக ரயில்வே பொது மேலாளரிடம் இந்த பிரச்சனையை கூறினேன். அப்போது "மதுரை ரயில்வே மைதானத்தை எந்த வகையிலும் நாங்கள் தனியாருக்கு கொடுக்கும் முயற்சியை மேற்கொள்ள மாட்டோம்" என்று கூறினார். அவருக்கும், அமைச்சருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
"இது ஒரு மிகப்பெரிய வெற்றி. இது மதுரையில் 12 ஏக்கர் நிலம் சம்பந்தமான பிரச்சனை மட்டுமல்ல, தமிழகத்தில் இனி எந்த ஒரு ரயில்வே மைதானத்தையும் தனியாருக்கு கொடுக்கும் முயற்சியில் ஈடுபட மாட்டார்கள்" என்ற ஒரு நம்பிக்கையை இந்த போராட்டத்தின் வெற்றி தமிழகம் முழுமைக்கும் ஏற்படுத்தியுள்ளது.
ஐஸ்கிரீம் விலை ஏற்றம் ஏன்? ஆவின் விளக்கம்!
இந்த பிரச்சனையில் இதுவரை வெளியில் சொல்லப்படாத ஒரு செய்தியை நான் இப்போது சொல்லப் போகிறேன். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி மாநில அரசின் நில நிர்வாக ஆணையருக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் ஒரு கடிதம் எழுதினேன் அதில் இந்த ரயில்வே மைதானம் தமிழ்நாட்டின் வருவாய்த்துறை ஆவணங்களில் கணபதி எந்தல் கண்மாய் என்று இருக்கின்றது கணபதி எந்தல் கண்மாய் வருவாய் துறைக்கு சொந்தமான கண்மாயை ரயில்வே துறை எப்படி ஆக்கிரமித்தது அதை ரயில்வே துறைக்கு யார் மாற்றி கொடுத்தார் என்பது குறித்து முழுமையான விசாரணை நடத்தி எங்களுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று கடிதம் எழுதினேன். அதன் விளைவாக இப்போது இந்த இடம் மாவட்ட வருவாய் துறை ஆவணங்களின் அடிப்படையில் வருவாய் துறைக்கு சொந்தமானது. இது எப்படி ரயில்வே நிர்வாகத்திற்கு சென்றது எனவே இந்த நிலத்தை விட்டு ரயில்வே நிர்வாகம் வெளியேற வேண்டும் என்று தற்போது மதுரை மாவட்ட நிர்வாகம் இரயில்வே நிர்வாகத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை தங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த வழக்கு நூறு சதவீதம் வெற்றி பெற போகின்ற வழக்கு. ரயில்வே துறையிடம் ரயில்வே துறைக்கான நிலம் தான் என்பதற்கு எந்த ஆவணமும் கிடையாது. வருவாய் துறையின் அனைத்து ஆவணங்களிலும் கணபதி எந்தல் கண்மாய் என்று தான் இருக்கின்றது. எனவேதான் தமிழ்நாடு அரசு வழக்கு தொடுத்துள்ளது.
வழக்கமாக ரயில்வே நிர்வாகம் தான் எங்களுடைய நிலத்தை தனிநபர் ஆக்கிரமித்துள்ளார் என்று வழக்கு போடுவார்கள் ஆனால் இந்த பிரச்சனையில் ரயில்வே துறை வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்துள்ளது என்று தமிழ்நாடு அரசு வழக்கு போட்டுள்ளது. இதில் 100 சதவீதம் வெற்றி கிடைக்கும் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
தற்போது இரண்டு வெற்றிகள் பெற்றுள்ளோம். ஒன்று இந்த நிலத்தை தனியார் நிறுவனத்திற்கு கொடுக்க மாட்டோம் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது, இரண்டாவது வெற்றி, இந்த நிலமே ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமில்லை என்று தமிழ்நாடு அரசு வழக்கு போட்டுள்ளது எனவே என்றென்றைக்கும் இது விளையாட்டு வீரர்களுக்கும் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கும் தான் சொந்தம் அந்த வகையில் நூறு சதவீதம் மதுரை மக்கள் வெற்றி பெற்றுள்ளார்கள் இந்த வெற்றியை மதுரை மக்கள் கொண்டாட வேண்டும் என்று இந்த நேரத்தில் நான் கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அவர் பேசினார்.