நாடு முழுவதும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை குறைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து சுற்றுசூழலை பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். அத்துடன் அக்டோபர் 2 முதல் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களை முற்றிலும் தடை செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருள்களுக்கான தடை ஏற்கனவே அமலில் இருக்கிறது. தடையை மீறி பதுக்கி விற்பனை செய்பவர்கள் மீது தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மதுரையில் இருக்கும் ஒரு கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டதை அடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அந்த கடையை பூட்டி சீல் வைத்துள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி தரப்பில் கூறிய போது, மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் இருக்கும் காய்கறி கடைகளில் ஆய்வு மேற்கொண்ட போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் ஒரு கடையில் விற்பனைக்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து சுமார் 250 கிலோ பிளாஸ்டிக் பைகள் கைப்பற்ற பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுவரையிலும் மதுரை மாநகராட்சி சார்பாக பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டிற்கு அபராத தொகையாக 94,500 வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.