கடும் தண்ணீர் தட்டுப்பாடு... மொட்டை போட தடை போட்ட கோவில் நிர்வாகம்..!
சதுரகிரி மலையில் நிலவும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக சுந்தரமகாலிங்கம் கோவிலில் மொட்டை போட அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
சதுரகிரி மலையில் நிலவும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக சுந்தரமகாலிங்கம் கோவிலில் மொட்டை போட அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுரையை அடுத்த சாப்டூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ளது. சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயர சதுரகிரி மலையில் உள்ள, சுந்தரமகாலிங்க சுவாமி கோயில்களில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று ஆடி அமாவாசை. இத்திருவிழா வரும் 31-ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக சதுரகிரி மலைக்குச் செல்ல வரும் 27-ம் தேதி முதல் ஆகஸ்ட் 1 வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு கோடை முடிந்தும் தொடர்ந்து கொளுத்தும் வெயில் காரணமாகவும், மேற்குத் தொடர்ச்சி மலையில் குறிப்பாக சதுரகிரி மலைப் பகுதியில் மழை பெய்யாததாலும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஓடைகள், காட்டாறுகள் வறண்டுள்ளன. வனப்பகுதியில் கிடைக்கும் குறைந்த தண்ணீரை அன்னதானக் கூடங்கள் பயன்படுத்துவதால் சதுரகிரி மலையில் இயங்கி வந்த 7 அன்னதானக் கூடங்களுக்கும் தடை விதிக்கப்பட்டு அவை மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், போதிய தண்ணீர் இல்லாததால், மலைப்பகுதியில் மொட்டை போட தடை விதிக்கப்படுவதாகவும், அடிவாரப் பகுதியிலேயே, மொட்டை அடித்துக்கொண்டு கோயிலுக்கு வருமாறு, கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.