சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக ஒரு நொடி கூட வீணாகக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.  

தூத்துக்குடி சாத்தான்குளத்தில் பென்னிக்ஸும் அவரது தந்தை ஜெயராஜும் போலீசாரால் கொடுமையாக தாக்கப்பட்டு அடுத்தடுத்து இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து வழக்கைக் கையில் எடுத்து விசாரித்து வருகிறது.

இதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது முதல் நிலை பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் நிதித்துறை நடுவர் அளித்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நீதிபதிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த சென்ற மாஜிஸ்திரேட்டை காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் காவலர் அவமதித்தது அதிர்ச்சி அளிக்கிறது. இறந்த ஜெயராஜ், பென்னிக்சின் உடல்களில் மோசமான காயங்கள் இருந்ததால், காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் இருக்கிறது.

நீதி கிடைக்கும் என ஜெயராஜ் குடும்பத்தினர் நம்புகின்றனர். எனவே, ஒரு நொடி கூட விசாரணையை தாமதிக்க கூடாது.  இந்த வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்கும் முன் தடயங்களை அழிக்க வாய்ப்பு உள்ளது. சிபிஐ விசாரணையை தொடங்கும் வரை நெல்லை டிஐஜி அல்லது சிபிசிஐடி விசாரிக்க இயலுமா? என்பதை அரசிடம் கேட்டு தெரிவிக்க வேண்டும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதுபற்றி பிற்பகலில்  அறிக்கை தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.