மக்களுக்கு நோய் பரப்பும் இடமாக மாறிவரும் மாட்டுத்தாவணி மார்க்கெட் - அரசுக்கு உதயகுமார் கோரிக்கை
மக்களுக்கு நோய் பரப்பும் இடமாக மாறி வரும் மாட்டுத்தாவணி காய்கறி மற்றும் பூ மார்க்கெட் மக்களுக்கு நோய் பரப்பும் இடமாக மாறி வருவதால் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் கோரிக்கை.
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வருகிற கோடை மழையிலே மாநகரம் தத்தளித்து கொண்டிருக்கின்ற ஒரு நிலையை தான் பார்க்கின்றோம். அதிலே குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழக அரசு இந்த மூன்று ஆண்டு சாதனையாக மதுரையிலே அடையாளமாக சொல்லப்படுகிற கலைஞர் நூலகம் சிறு மழைக்கே தாங்காத ஒரு நிலையை நாம் பார்க்கின்றோம்.
இந்த நூலகத்திலே மீண்டும் தண்ணீர் புகுந்துள்ளது. ஆனால் அவர்கள் மறுப்பார்கள், அதனால் தான் அதனுடைய புகைப்படத்தோடு இதை அரசினுடைய கவனத்திற்கு நான் கொண்டு வருகின்றேன். இரண்டு பிரிவுகள் தற்காலிகமாக மூடல் என்கிற ஒரு சாதனையை நாம் பார்க்கின்றோம், தற்போது தான் இந்த நூலகம் அரசின் சாதனையாக முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் மதுரையிலே நாங்கள் கலைஞர் நூலகத்தையும், ஜல்லிக்கட்டு ஏர் தழுவுதல் அரங்கமும் கட்டியிருக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள்.
கோடை மழைக்கே தாக்குபிடிக்காத கலைஞர் நூற்றாண்டு நூலகம்; 2 பிரிவுகள் மூடப்பட்டதால் வாசகர்கள் ஏமாற்றம்
ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கு மின்சார கட்டணம் அரசுக்கு செலுத்தவில்லை என்று பத்திரிக்கை செய்தி வெளியான பிறகு தான் அங்கே மின்சார கட்டணம் செலுத்தப்பட்டது என்ற உண்மை நிலவரம் முதலமைச்சருக்கு தெரியுமா என்று தெரியவில்லை. அதுபோல கலைஞர் நூலகத்திலே கீழ் தளத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பிரிவு, கலைக்கூடம்பிரிவு கனமழையில் மூடப்பட்டு இருக்கிறது.
அது மட்டுமல்ல மதுரையின் மையமாக இருக்கிற மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட், பூ மார்க்கெட் உள்ளிட்ட அனைத்து இடங்களும் இன்றைக்கு நோய் தொற்று பரப்புகின்ற ஒரு சூழ்நிலையை நாம் பார்க்கிறோம். தொடர்ந்து பெய்து வருகிற மழையாலே காய்கறிகள் வாங்குவதற்கும், பூ வாங்குவதற்கும் மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டை நுழையும் முன்பே நோய்களை வாங்கும் நிலையை சீர் செய்ய மதுரை மாவட்ட நிர்வாகம் முன்வருமா? என்று மதுரை மாவட்ட மக்கள் இங்கே வேதனையோடு தங்களுடைய கவலையை தெரிவிக்கின்றார்கள்.
உண்மை ஒருநாள் வெட்ட வெளிச்சமாக உலகத்திற்கு தெரிய வரும் என்பதைப்போல, பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டு விட்டது என்பதை போல அரசு உள்ளது என விமர்சித்துள்ளார்.