தென்தமிழகம் மற்றும் உள்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசனலம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்குள் தென்தமிழகமான வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய உள்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனையொட்டியுள்ள உள்மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. இதற்கிடையில், குளச்சல்-தனுஷ்கோடி இடையில் நாளை நள்ளிரவு வரை 3.7 மீட்டர் உயரத்திற்கு ராட்சத அலைகள் எழக்கூடும். எனவே மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.