தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வந்தது. இதனால் மாநிலத்தில் இருக்கும் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து நீர்மட்டம் வேகமாக உயரத்தொடங்கியது. பல அணைகள் நிரம்பி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. சென்னையிலும் பலத்த மழை பெய்ததால் ஏரிகள் நிரம்பத் தொடங்கின. சென்னையின் நிலத்தடி நீர்மட்டம் அளவும் உயர்ந்துள்ளதாக அரசு தெரிவித்தது.

இந்தநிலையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இலங்கையின் தென்கிழக்கே தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இன்று மத்திய இந்திய பெருங்கடல் மற்றும் குமரிக்கடலை ஒட்டிய பகுதிகளில் நிலவி வருவதால் அதை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் ஏற்கனவே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.