தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கும் நிலையில் கோடை வெயிலின் வெப்பத்தை தணிக்கும் வகையில் பெய்த மழை மக்களுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பல இடங்களிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் மேலும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக கூறிய சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், தமிழகத்தில் நிலவும் வெப்ப சலனம் காரணமாக அடுத்துவரும் இரு நாட்களுக்கு திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், கன்னியாகுமரி, நாகப்பட்டினம் ஆகிய 9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புகள் நிலவுவதாகவும் பிற மாவட்டங்களில் வறண்ட வானிலையே காணப்படும் என்றும் கூறியிருக்கின்றனர். நேற்றைய நிலவரப்படி அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் 7 சென்டி மீட்டர் மழையும் ராமநாதபுரத்தில் 4 சென்டி மீட்டர் மழையும் தொண்டியில் 3 சென்டிமீட்டர் அளவில் மழையும் பதிவாகி இருக்கிறது.

தென்மாவட்டங்களில் மழை பெய்து மக்களுக்கு இதமான சூழலை ஏற்படுத்தினாலும் பிற மாவட்டங்களில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. மக்கள் வீடுகளை விட்டு வர இயலாத அளவுக்கு வெயிலின் தாக்கம் நிலவிக் கொண்டிருக்கிறது. இதனால் இரவு நேரங்களிலும் வெப்பம் ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை நிலவரப்படி அதிகபட்சமாக மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் 102 டிகிரி அளவில் வெயில் பதிவாகி இருக்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை திறந்தவெளியில் சுற்றுவதை தவிர்க்குமாறு வானிலை மைய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.