ஆழ்கடலில் சூறைக்காற்றுடன் மிரட்டும் மழை..! மீனவர்களுக்கு எச்சரிக்கை..!
தெற்கு அரபிக்கடலில் 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசுவதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பெய்து வந்ததையடுத்து மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன்காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து பல முக்கிய அணைகள் நிரம்பிய ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.
அதன்படி தென்மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து மழை நீடித்து வருகிறது. இதனிடையே தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
தலைநகர் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. தெற்கு அரபிக்கடலில் 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசுவதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 1 சென்டிமீட்டர் மழை பெய்திருக்கிறது.