மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்த மோடி.. திடீர்னு வண்டியை நிறுத்தி.. பிரதமர் பார்த்த பிரபலம் இவரா..!
திருப்பூர், பல்லடத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு, உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.
பல்லடத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பின்னர், மதுரை வீரபாஞ்சான் பகுதியில் உள்ள லஷ்மி பள்ளியில் நடைபெறும் சிறுகுறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான டிஜிட்டல் செயலாக்க திட்ட கருத்தரங்கில் கலந்துகொண்டார் பிரதமர் மோடி. பிறகு மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வருகை தந்த பிரதமருக்கு பூரண கும்ப மரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து கோவில் அறங்காவல்குழு தலைவர் ருக்மணி பழனிவேல்ராசன் வரவேற்பு அளித்தார். இதனை தொடர்ந்து அஷ்டசக்தி மண்டபம் வழியாக சென்று மீனாட்சியம்மன் சன்னதிக்கு சென்று வழிபாடு நடத்தி பின்னர் சுந்தரேஸ்வரர் சன்னதியும் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் பொற்றாமரை குளத்தை பார்வையிட்டார்.
இதனையடுத்து சுவாமி தரிசனம் முடித்துவிட்டு கோவிலில் இருந்து புறப்பட்டபோது கோவில் கிழக்கு கோபுர வாசல் அருகே நின்றுகொண்டிருந்த பொதுமக்களை பார்த்து கையசைத்து கும்பிட்டுசென்றார். பின்னர் மதுரை ஆதினம் மடத்தின் முன்பாக நின்றுகொண்டிருந்த மதுரை ஆதினத்தை பார்த்த பிரதமர் மோடி அவரை கையசைத்து அழைத்தார்.
மதுரை ஆதினத்தின் சார்பில் அளிக்கப்பட்ட மரியாதையை ஏற்றுக்கொண்டார் பிரதமர் மோடி. இதனைத் தொடர்ந்து சாலையோரத்தில் நின்ற பொதுமக்களை பார்த்து கையசைத்தபடியே சென்றார். பிரதமர் வருகையை முன்னிட்டு பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
அதுமட்டுமில்லாமல், மாலை 4 மணி முதல் 8 மணி வரை பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி அளிக்கவில்ல. 2021 ஆம் ஆண்டு பிரதமர் மோடி மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த நிலையில், இன்று 2 ஆம் முறையாக சாமி தரிசனம் செய்வதற்கு வருகை தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.