மதுரை அருகே இருக்கும்  கரிமேடு மோதிலால் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 55). இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். ம.தி.மு.க.வில் தொழிற்சங்க நிர்வாகியாக இருக்கும் இவர் அச்சக நிறுவனம் நடத்தி வந்துள்ளார். தொழிலை விரிவுபடுத்துவற்காக பலரிடமும் இளங்கோவன் கடன் பெற்றுள்ளார். அதை சிறிது சிறிதாக அவர் செலுத்தி வந்த நிலையில் கொரோனா பரவுதல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  கடைகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், பொது போக்குவரத்து அனைத்தும் முடக்கப்பட்டு பொதுமக்கள் வீடுகளில் இருக்க அரசு உத்தரவிட்டது. 50 நாட்களுக்கும் மேலாக நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால் பொருளாதாரம் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அதை மீட்டெடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் இளங்கோவனின் அச்சகத் தொழிலும் ஊரடங்கால் முடக்கிப் போனது. இதனால் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் அவர் பரிதவித்து வந்துள்ளார். மன உளைச்சலில் இருந்த அவர் நேற்று முன்தினம் இரவு அலுவலகத்திற்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றார். பின் வெகுநேரமாகியும் இளங்கோவன் வீட்டிற்கு வராததால் அச்சக அலுவலகத்திற்கு சென்ற குடும்பத்தினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு ரத்தவெள்ளத்தில் இளங்கோவன் பிணமாக கிடந்தார். தகவலறிந்து வந்த காவலர்கள் இளங்கோவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். 

அலுவலகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் அவர் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அதில், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள போவதாகவும், தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று எழுதி வைத்திருந்தார். ஆனால் விஷம் குடிக்கவில்லை. கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவை அனைத்தும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன. அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்திருக்கும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.