உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களிலும் பொங்கல் பரிசு வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடியாக தடை விதித்துள்ளது. 

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் 1,000 ரூபாய் வழங்கப்பட்டது போல இந்த ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, 2 அடி நீள கரும்புதுண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் மற்றும் ரொக்கப்பணம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என கடந்த மாதம் 26-ம் தேதி முதல்வர் பழனிச்சாமி அறிவித்திருந்தார். இதற்கான திட்டத்தையும் கடந்த 29-ம் தேதி தொடங்கி வைத்தார். 

இதனிடையே, தமிழகத்தில் ஊரக அமைப்புகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வரும் 27-ம் தேதி மற்றும் 30-ம் தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்பு மனு தாக்கல் முடிவடைந்து, இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டதால், 1000 ரூபாய் வழங்க தடையில்லை என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி கூறினார். தேர்தலுக்கு 2 நாட்கள் முன்னதாக 1000 ரூபாய் வழங்க அரசு திட்டமிட்டிருந்தது. 

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் பொங்கல் பரிசு வழங்க தடை விதிக்கக் கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த சுப்புலட்சுமி என்பவர்  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்க தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கவில்லை என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் மட்டும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.