ஒரு ரூபாய்க்கு பிரியாணி..! கொரோனா விபரீதத்தை அலட்சியம் செய்து கும்பலாக முண்டியடித்த மக்கள்..!
கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் விபரீதத்தை உணராது பிரியாணி வாங்க திரண்ட மக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சீன நாட்டின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் முதன்முதலில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் கோர தாண்டவம் ஆடி வருகிறது. இத்தாலி, ஈரான்,தைவான், ஜப்பான், கொரியா, அமெரிக்கா, இந்தியா என 165க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு 16 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி இருப்பதால் உலக நாடுகள் பீதி அடைந்துள்ளன.
கொரோனா வைரஸ் கோழிகள் மற்றும் சிக்கன் முலமாக அதிகமாக பரவுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவ தொடங்கியது. இதனால் அச்சமடைந்த மக்கள் சிக்கன் மட்டுமில்லாது அசைவ உணவு வகைகளை தவிர்த்து வருகின்றனர். இதனால் கோழிக்கறி விற்பனை மந்தமடைந்துள்ளது. கோழிக்கறியால் கொரோனா பரவுவது நிரூபிக்காத நிலையில் விற்பனை சரிந்துள்ளதால் வியாபாரத்தை பெருக்கும் நோக்கில் பல்வேறு இடங்களில் பிரியாணி கடை உரிமையாளர்கள் பல சலுகைகளை வழங்கி வருகின்றனர்.
இந்தநிலையில் மதுரை அண்ணாநகரில் புதியதாக பிரியாணி கடை ஒன்று திறக்கப்பட்டது. திறப்பு விழாவை முன்னிட்டு வாடிக்கையாளர்களை கவரும் விதமாக ஒரு ரூபாய்க்கு பிரியாணி விற்பனை செய்ய உரிமையாளர் முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டார். அதைப்பார்த்து சுற்றுப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பெருமளவில் கடையில் குவிந்தனர். இதையடுத்து முன்பதிவு செய்து டோக்கன் வழங்கப்பட்டது. அதன்படி வந்தவர்களுக்கு ஒரு ரூபாய்க்கு பிரியாணி விற்பனை செய்யப்பட்டது. கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் விபரீதத்தை உணராது பிரியாணி வாங்க திரண்ட மக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.