ஜல்லிக்கட்டு காளையின் இறுதிச்சடங்கில் திரண்ட மக்கள்..! தடுக்கத் தவறியதாக காவலர்கள் அதிரடி இடமாற்றம்..!
பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் வென்று வாகை சூடி இருக்கும் அக்காளை வயது மூப்பு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு மரணமடைந்தது. இதையடுத்து காளைக்கு இறுதி சடங்குகள் செய்ய ஏராளமான ஊர் மக்கள் ஒன்றாக திரண்டுள்ளனர். காளை மாட்டின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய மக்கள் அதன் உடலை ஊர்மந்தை அருகே அடக்கம் செய்திருக்கின்றனர்.
இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. தமிழகத்திலும் ஊரடங்கு நடைமுறைகள் மிகக் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன. அத்தியாவசிய தேவைகள் அன்றி பிற காரணங்களுக்காக மக்கள் வீட்டை விட்டு வெளிவருவதை தவிர்க்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி இருக்கிறது. இந்த நிலையில் மதுரை பாலமேடு அருகே இருக்கும் ஒரு கிராமத்தில் சமூக விலகலை கடைபிடிக்காமல் உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளையின் இறுதிச்சடங்கில் பெருந்திரளான மக்கள் கூடியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே இருக்கிறது மூடுவார்பட்டி கிராமம். இங்கிருக்கும் செல்லாயி அம்மன் கோவிலில் கிராம காளை வளர்க்கப்பட்டு வந்தது. சுற்றுவட்டாரத்தில் நடைபெறும் பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் வென்று வாகை சூடி இருக்கும் அக்காளை வயது மூப்பு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு மரணமடைந்தது. இதையடுத்து காளைக்கு இறுதி சடங்குகள் செய்ய ஏராளமான ஊர் மக்கள் ஒன்றாக திரண்டுள்ளனர். காளை மாட்டின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய மக்கள் அதன் உடலை ஊர்மந்தை அருகே அடக்கம் செய்திருக்கின்றனர். அதில் பங்கேற்ற மக்கள் யாரும் முகக்கவசம் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் அணித்திருக்கவில்லை.
இது தொடர்பான காணொளி காட்சி சமூக வலைதளமான முக நூலில் வெளியாகி வைரலாக பரவியது. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும்போது சமூக விலகலை கடைபிடிக்காமல் மக்கள் கூடியது சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து கோவில் பூசாரி மலைச்சாமி மற்றும் அதே ஊரைச் சேர்ந்த 50 பேர் மீது பாலமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் பொது மக்கள் ஒன்றாக கூடுவதை தடுக்கத் தவறியதாக பாலமேடு காவல் உதவி ஆய்வாளர் ஜெய் கண்ணன் மற்றும் தலைமை காவலர் மாரிராஜ் ஆகியோர் மதுரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர்.