கோவை தொடர்குண்டு வெடிப்பு மீண்டும் தலைதூக்குமோ என்ற அச்சத்தில் மக்கள்; முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அதிர
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கோவை தொடர்குண்டு வெடிப்பு சம்பவம் மீண்டும் தலை தூக்கி விடுவோமோ என்ற அச்சத்தில் மக்கள் உறைந்திருக்கின்றனர் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வீடியோ வெளியிட்டு இருக்கும் ஆர்.பி.உதயகுமார், ''பயங்கரவாதத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் திமுக அரசை தூக்கி எறியும் வரலாறு மீண்டும் தமிழகத்தில் உருவாகும். தமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று சட்டத்திற்கு விரோதமான செயல்கள் தொடர்ந்து நடைபெறுவதை யாரும் மறுக்க முடியாது. அதேபோல் இணைய வழி குற்றமும் மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது.
வன்முறை என்பது வேறு, பயங்கரவாதம் என்பது வேறு. தீவிரவாதம், பயங்கரவாதம் செயலை கண்டு வேடிக்கை பார்க்க கூடாது. தமிழுகம் முழுவதும் இது தற்போது விவாதப் பொருளாக உள்ளது. தீவிரவாத பயங்கரவாதத்தை அரசு வேடிக்கை பார்த்தால், மக்கள் தூக்கி எறிவார்கள். அரசை ஒழிக்கும் சக்தி மக்களுக்கு உள்ளது.
1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி கோவையில் 11 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்றது. இதில் 58 பேர் கொல்லப்பட்டனர். 500 பேர் பலத்த காயம் அடைந்து வேதனை அடைந்தனர். அந்த சம்பவம் நம் கண் முன்னே மீண்டும் அரங்கேறி விடுமோ என்பதை காட்டிடும் வகையில், கோவையில் நடைபெற்ற பயங்கரவாத தற்கொலை தாக்குதல் விசாரணையில் தெள்ளத் தெளிவாகிறது.
தாக்குதலை கட்டுப்படுத்த தமிழக காவல்துறை எடுத்த நடவடிக்கை வெற்றி பெறவில்லை என்பது கேள்விக்குறியாக உள்ளது. இது எதை காட்டுகிறது என்றால் தமிழகத்தில் மீண்டும் பயங்கரவாதம், தீவிரவாதம் அதிகரித்துவிட்டதோ என்ற அறிகுறி தென்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கோவை சம்பவம் தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன்பு குண்டு வெடிப்பு சம்பவத்தை நினைவூட்டும் விதமாக, கார் குண்டு வெடிப்பு சம்பவம் மீண்டும் தமிழகத்தில் வேர்விட்டு துவங்கிவிட்டதா என்ற அச்சத்தை நமக்குள் ஏற்படுத்தியுள்ளது.
இதில் பலியான ஜமேஷா முபின் ஏற்கெனவே கண்காணிப்பு வளையத்தில் உள்ளார். கண்காணிப்பு வளைத்தில் இருக்கும் ஒரு நபரை அரசு கண்காணிக்க தவறி விட்டதா என்ற அச்சம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இன்னும் கண்காணிப்பில் இருப்பவர்களில் எத்தனை பேரை கண்காணிக்க தவறிவிட்டதோ என்ற அச்சம் தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து ஏதேசையாக நடந்தது அல்ல. இந்திய புலனாய்வு முகாமை இது பயங்கரவாத சதியாக இருக்க கூடும் என்று கூறியுள்ளது. இதில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். 75 கிலோ வெடி மருந்து தயாரிக்கும் மூலப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதில் இறந்த நபர் ஜமேஷா முபின் டைரியை பார்த்தால் கோவையில் ஐந்து இடங்களில் தற்கொலை தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. அமைதி பூங்காவான மாநிலம் தற்போது பயங்கரவாதத்தால் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் கூட, இதுகுறித்து அரசுக்கு கேள்விக்கு எழுப்பினார். ஆனால் முதலமைச்சர் எந்த பதிலும் கூறவில்லை. இது மவுனமாக இருக்கும் நேரம் அல்ல. களத்தில் மக்களை காக்கும் நேரம் ஆகும்.
மீண்டும் தமிழகத்தில் 25 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் பயங்கரவாதம் நடந்துவிடுமா என்று அச்சத்தத்தில் மக்கள் உறைந்துள்ளனர். முதலமைச்சர் இதை எல்லாம் இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று பதிவிட்டுள்ளார்.