Asianet News TamilAsianet News Tamil

மதுரை ஆவினில் போலி சாதி சான்றிதழ் மூலம் பணிக்கு சேர்ந்த அதிமுகவினர்: நடவடிக்கை எடுக்க உத்தரவு!

மதுரை ஆவினில் போலி சாதி சான்றிதழ் மூலம் பணிக்கு சேர்ந்த அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க ஆவின் தலைமையக விஜிலென்ஸ் எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்

Order to take action against admk cadres allegedly get job in madurai aavin by giving fake caste certificates
Author
First Published Aug 16, 2023, 4:24 PM IST

மதுரை ஆவின் நிர்வாகத்தில் பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தை சார்ந்த ஒரே குடும்பத்தினர் இரண்டு பேர் போலி சாதி சான்றிதழ் மூலம் அதாவது எஸ்.சி சாதி சான்றிதழ் பெற்று வேலைக்கு சேர்ந்துள்ள புகார் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க, சென்னை தலைமை ஆவின் விஜிலன்ஸ் எஸ்பி ஜெயலட்சுமி ஐபிஎஸ் மதுரை ஆவின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மதுரை ஆவினில் பணிபுரிந்த கே.பழனிச்சாமி ஓய்வு பெற்று விட்டார். அவருடைய தம்பி கே.பரமானந்தம் தற்போது மதுரை ஆவினில் வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் பாலமுருகன், செயல் அலுவலர். இவரும் மதுரை ஆவினில் வேலை பார்த்து வருகின்றனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டில் பரமானந்தனும் அவரது மகன்  பால முருகனும் போலியான சாதி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்தது தொடர்பாக புகார் எழுந்துள்ளது. இந்த புகார் தொடர்பாக மதுரை திமுக தொழிற்சங்கத்தை சேர்ந்த மானகிரி கணேசன் என்பவர் புகார் அளித்திருந்தார். அந்த புகார் தொடர்பாக ஆவின் விஜிலன்ஸ் எஸ்.பி. ஜெயலட்சுமி மதுரைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

அதில் பரமானந்தனின் அண்ணன் பழனிச்சாமி பிற்படுத்தப்பட்டோர் சாதி சான்றிதழ் கொடுத்து வேலைக்கு சேர்ந்து உள்ளார். ஆனால் அவரது தம்பியான பரமானந்தன் மற்றும் அவரது மகன் பாலமுருகன் ஆகிய இருவரும் பட்டியல் இன சாதி சான்றிதழ் கொடுத்து பணிக்கு சேர்ந்தது கண்டறியப்பட்டது. இந்த சாதி சான்றிதழ் உண்மையானவையா யார் கொடுத்தது என்பது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரித்து அறிக்கை அளிக்கும்படி எஸ்பி ஜெயலட்சுமி உத்தரவிட்டிருந்தார்.

மகளிருக்கான இலவச பயண திட்டத்தால் பெண்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது - அமைச்சர் பெருமிதம்

மேலும், இது தொடர்பாக மதுரை ஆவின் நிர்வாகம் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜிலென்ஸ் எஸ் பி ஜெயலட்சுமி மதுரை ஆவின் அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் உத்தரவிட்டுள்ளார்.

மேற்படி, கே.பழனிச்சாமி குடும்பத்தினர் அதிமுகவை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. ஆனால், போலி சாதி சான்றிதழ் தொடர்பாக தங்களுக்கு பிரச்சினை வந்து விடும் என நினைத்த பரமானந்தன் தற்போது திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டு கட்சியில் பதவியும் வாங்கி விட்டதாக கூறப்படுகிறது.

இவர்கள் தவிர, அதிமுக ஆட்சி காலத்தில் இது போன்ற பலர் பணிக்கு சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, மதுரை மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆவின் நிர்வாகங்களில் பட்டியல் சாதி சான்றிதழ் மூலம் பணிக்கு சேர்ந்தவர்கள் குறித்து ஆய்வு நடத்தி விசாரணை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல ஒவ்வொரு துறையிலும் இருக்கும் விஜிலன்ஸ் அதிகாரிகள் இது போன்று போலி சான்றிதழ் விஷயங்களில் கால தாமதம் செய்யாமல் உரிய நடவடிக்கை எடுத்து வேலை வாய்ப்பு இன்றி இருக்கும் பட்டியலின சமூகத்தினருக்கு உரிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios