மதுரை பழங்காநத்தம் அருகே இருக்கும் நேரு நகர் பகுதியில் தெரு நாய் ஒன்று சுற்றித்திரிந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக அந்த தெரு நாய் குட்டிகளை ஈன்றுள்ளது. அவை அனைத்தையும் அது அங்கிருக்கும் ஒரு சந்தில் பாசத்தோடு பாதுகாத்து வந்துள்ளது. இந்த நிலையில் குட்டிகளுள் ஒன்று சாலையில் சுற்றி தெரியவே, எதிர்பாராத விதமாக வாகனத்தில் அடிபட்டு இறந்தது.

சாலை ஓரத்தில் கிடந்த குட்டி நாயை, அதன் தாய் வந்து எழுப்ப முயன்றுள்ளது. ஆனாலும் அது அசையாமல் கிடந்ததால், தனது வாயால் அதைக்கவ்வி கொண்டு இரண்டு நாட்களாக அங்கிருக்கும் பகுதிகளில் சுற்றி வருகிறது. தனது குட்டி இறந்து போனது அந்த நாய்க்கு தெரிந்திருக்குமோ இல்லையோ, பாசத்தில் அதை வாயில் தூக்கி திரியும் காட்சி காண்போரை பரிதாபம் கொள்ளச்செய்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை அப்பகுதி இளைஞர்கள் படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் பரவ விட, அது தற்போது வைரலாகி இருக்கிறது.