மதுரையில் இருக்கும் கே.புதூர் அழகர் நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார். வயது 42. இவருக்கும் கூடல்நகரைச் சேர்ந்த கவிதா (35) என்பவருக்கும் கடந்த 2008 ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். செந்தில்குமார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால், அவரை விட்டு பிரிந்து கவிதா தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் 2013ம் விதுபாலா என்கிற பெண்ணை செந்தில்குமார் இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். ஆனால் சில மாதங்களிலேயே கருத்துவேறுபாடு ஏற்பட்டு விதுபாலா பிரிந்து விட்டார். தற்போது போலி திருமணம் ஆவணங்கள் தயார் செய்து அதன்மூலம் அருப்புக்கோட்டை அருகே இருக்கும் பாலையம்பட்டியைச் சேர்ந்த மீனாட்சி(32) என்கிற பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்துள்ளார்.

இதுகுறித்து கவிதா தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தன்னை விவாகரத்து செய்யாமல் போலி ஆவணங்கள் தயாரித்து கணவர் மூன்றாவது திருமணம் செய்திருப்பதாகவும், அதற்கு அவரது குடும்பத்தினர் உடந்தையாக இருந்ததாகவும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், செந்தில்குமாரையும் அவரது மூன்றாவது மனைவி மீனாட்சியையும் கைது செய்துள்ளனர். செந்தில்குமாரின் உறவினர்கள் 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.