மாநகராட்சி பள்ளிகளுக்கு ரூ.2 கோடி நன்கொடை அளித்த மதுரை வத்தல் வியாபாரி!
மாநகராட்சி பள்ளிகளுக்கு ரூ.1.8 கோடி நன்கொடை அளித்த மதுரையை சேர்ந்த 86 வயதான வத்தல் வியாபாரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன
மதுரையை சேர்ந்தவர் டி.பி.ராஜேந்திரன் (86). வத்தல் வியாபாரம் செய்து வரும் சொந்தமாக ஒரு பள்ளிக்கூடத்தை கட்ட நினைத்தார். ஆனால், அவரது கனவு பலிக்காமல் போனதால், மாநகராட்சி பள்ளிகளுக்கு ரூ.1.8 கோடி நன்கொடை அளித்து தனது எண்ணத்தை நிவர்த்தி செய்துள்ளார்.
பள்ளிப் படிப்பை ஐந்தாம் வகுப்போடு பாதியில் நிறுத்திய டி.பி.ராஜேந்திரன் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு, காய்ந்த மிளகாய் வத்தல்களை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளார். ஒரு பாக்கெட் 10 பைசாவுக்கு விற்ற அவர், சிறுகசிறுக பணத்தை சேமித்ததுடன் தனது தொழில் சாம்ராஜ்யத்தையும் வளர்த்துள்ளார்.
‘1985ஆம் ஆண்டு சிறிய மளிகை வியாபாரம் செய்தேன். படிப்படியாக, எனது வணிகம் வளர்ச்சியடைந்து, 'வத்தல்' விற்பனையில் கவனம் செலுத்தினேன்’ என ராஜேந்திரன் கூறுகிறார். தற்போது மதுரை தத்தனேரியில் திருப்பதி விலாஸ் வத்தல் நிறுவனத்தை தனது மூன்று மகள்கள் உள்பட தனது குடும்பத்துடன் சேர்ந்து நடத்தி வரும் அவர், அப்பளம், வத்தல்கள், வடகம் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகிறார்.
தான் சேமித்த பணத்தைப் பயன்படுத்தி குழந்தைகள் படிக்க ஒரு பள்ளியைக் கட்ட விரும்பியதாக கூறும் அவர், தனது கனவை நிறைவேற்ற தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை எனவும், 2018ஆம் ஆண்டில் திரு.வி.க. மாநாகராட்சி பள்ளிக்கு சில வசதிகள் தேவை என தன்னிடம் ஒருவர் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அந்த பள்ளியின் வகுப்பறைகள் மற்றும் பிற உள்கட்டமைப்பு வசதிகளை அமைக்க ரூ.1.1 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார். அத்துடன், நடப்பாண்டில் கைலாசபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியை மேம்படுத்துவதற்காக ரூ.71 லட்சத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
மாநகராட்சி பள்ளிகளுக்கு ரூ.1.8 கோடி நன்கொடை அளித்த அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மூத்த தமிழறிஞரும், பட்டிமன்ற பேச்சாளருமான சாலமன் பாப்பையா, ராஜேந்திரனை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
மதுரையில் மாநகராட்சிப் பள்ளிகளின் வளர்ச்சிக்காக ரூ.20 லட்சத்தை நன்கொடையாக ஏற்கனவே வழங்கியுள்ள சாலமன் பாப்பையா, ராஜேந்திரனைப் பாராட்டியதுடன், செல்வம் கொழிக்கும் வழிபாட்டுத் தலங்களுக்குப் பதிலாக பள்ளிகளுக்கு நன்கொடை அளித்து தொழிலதிபர்களுக்கு முன்னுதாரணமாக ராஜேந்திரன் திகழ்வதாகவும் கூறினார்.
மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மதுரை மாநகராட்சி ஆணையர் கே.ஜே.பிரவீன் குமார் ஆகியோரும் ராஜேந்திரனை சந்தித்து பாராட்டு தெரிவித்துள்ளனர்.
“மதுரை மாநகரின் வளர்ச்சிக்கு மேலும் என்ன செய்ய வேண்டும் என்று மாநகராட்சி ஆணையரை சந்தித்து ஆலோசித்ததில் மகிழ்ச்சி அடைந்தேன். இன்னும் நிறைய செய்ய முடியும் என நம்புகிறேன். மதுரையில் உள்ள புராதன சின்னங்களில் ஒன்றான புது மண்டபம் அருங்காட்சியகமாக உருவாக்கப்படுகிறது. இதை உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகமாக மாற்ற எனது ஆதரவை வழங்கியுள்ளேன்.” என ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.