Asianet News TamilAsianet News Tamil

மதுரை விமானநிலையம்: தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு - சு.வெங்கடேசன் காட்டம்!

தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய அரசுக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்

Madurai MP Su venkatesan condemns union govt on madurai airport 24 hours service smp
Author
First Published Oct 10, 2023, 4:37 PM IST | Last Updated Oct 10, 2023, 4:39 PM IST

மதுரை விமானநிலையம் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து 24மணி நேரமும் இயங்கும் என விமானத்துறை அறிவித்தது. ஆனால் இன்று வரை நடைமுறைக்கு வரவில்லை. தமிழ்நாட்டை வஞ்சிப்பதை 24 மணி நேரப் பணியாக செய்து கொண்டிருக்கும் ஒன்றிய அரசின் செயல்பாட்டினை வன்மையாக கண்டிப்பதாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலைய ஆலோசனைக்குழு கூட்டம் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி, இணைத்தலைவர் சு.வெங்கடேசன் எம்.பி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை எம்.பி., சு.வெங்கடேசன், “மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அங்கீகரிக்க வேண்டும். அதேபோல பைலேட்டர் ஒப்பந்தத்தில் மதுரை விமான நிலையத்தை இணைக்க வேண்டும். மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் இயங்கும் விமான நிலையமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்ததை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.” என்றார்.

முதலில் நல்ல செய்தியை பகிர்ந்து கொள்கிறேன் என்று தெரிவித்த அவர், “வாரத்திற்கு மூன்று நாட்கள் மதுரையிலிருந்து சிங்கப்பூருக்கு இயக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வருகின்ற அக்டோபர் 22ஆம் தேதி முதல் தினசரி விமானமாக இயக்கப்பட இருக்கிறது.” என்றார்.

மேலும், “மதுரை விமானநிலையத்தின் ஓடு பாதையை விரிவாக்குகிற விஷயத்தில் நிலம் கையகப்படுத்த வேண்டிய பகுதிகள் என்பது முழு முற்றாக முடிவடைந்து இருக்கிறது. அதில் கடந்த ஓராண்டுகளாக தமிழக அரசு பல நல்ல முயற்சிகளை செய்தது. அதன் விளைவாக தனி நபர்களிடமிருந்து நிலங்கள் எடுக்கப்பட வேண்டியது முற்றாக முடிவு பெற்று இருக்கிறது. இரண்டு குளங்களினுடைய சிறு பகுதி என்பது வகை மாற்றம் செய்யப்பட வேண்டிய வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் அது முடியும்,” என்று சு.வெங்கடேசன் எம்.பி. தகவல் தெரிவித்தார்.

 

 

“இவ்வருடம் ஏப்ரல் மாதத்தில் இருந்து மதுரை விமான நிலையம் 24*7 விமான நிலையமாக செயல்படும் என்று விமானத்துறை அறிவித்த அறிவிப்பு இப்பொழுது வரை நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கிறது. மதுரை விமான நிலைய வளர்ச்சியில் ஒன்றிய அரசின் அக்கறையின்மை தொடர்ச்சியாக நீடிக்கிறது. பல அழுத்தங்களுக்கு பிறகுதான் 24×7 என்பதை ஒத்துக் கொண்டு அறிவித்தார்கள் ஆனால் இன்றைக்கு வரை அதை நடைமுறைப்படுத்த மறுக்கிறார்கள். அது குறித்து இன்றைய கூட்டத்தில் மிக கவலையோடு விவாதிக்கப்பட்டது. இதனுடைய தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் தென் மாவட்டங்களில் இருக்கிற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சேர்த்து, அதேபோல மதுரை விமான நிலைய ஆலோசனை குழு உறுப்பினர்களையும் இணைத்து ஒன்றிய அமைச்சரை சந்தித்து இது குறித்து வலியுறுத்துவது என்ற முடிவினை எடுத்து இருக்கிறோம்.” என்றும் அவர் கூறினார்.

கலைஞர் மகளிர் உரிமை தொகை: உதயநிதி ஸ்டாலின் சொன்ன ஹேப்பி நியூஸ்!

தொடர்ந்து பேசிய சு,வெங்கடேசன் எம்.பி, “மதுரை மற்றும் தென் மாவட்ட தொழில் வணிக வளர்ச்சிக்கு மதுரை விமான நிலையத்தினுடைய விரிவாக்கம், சர்வதேச விமான நிலையமாக அறிவிப்பது மிக முக்கியமான நடவடிக்கை. இதற்கு சொத்தை காரணங்களை மீண்டும் மீண்டும் ஒன்றிய அரசு சொல்வது ஏற்க முடியாத ஒன்று. நம்முடைய விமான நிலையத்தை பயன்படுத்துகிற உள்நாட்டு பயணிகளுடைய எண்ணிக்கையும் சர்வதேச பயணிகளின் எண்ணிக்கையும் மிக அதிகம். "டொமஸ்ட்டிக்" விமான நிலையங்களில் மதுரை விமான நிலையமே நாட்டில் முதலிடத்தில் இருக்கிறது. நமக்கு நியாயமான உரிமைகளை தருவதிலே தொடர்ந்து தயக்கம் மறுப்பு ஒன்றிய அரசுக்கு இருக்கிறது. பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக இருக்கிறது. அதனை விட பலமடங்கு மதுரை விமான நிலையத்தில் பயணம் செய்கிற பயணிகளின் எண்ணிக்கை அதிகம். எனவே இது முழுக்க ஒரு அரசியல் காரணத்துக்காக செய்யப்படுகிற ஒரு வஞ்சகம். அதனால்தான் தொடர்ந்து இவ்வளோ பெரிய ஒரு போராட்டத்தை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.” என்றார்.

மதுரை விமானநிலையம் ஏப்ரல் மாதத்திலிருந்து 24 மணி நேரமும் இயங்கும் என்ற அறிவிப்பை வெளியிட்ட ஆணையை நடைமுறைப்படுத்துவதில் என்ன பிரச்சனை இருக்கிறது என கேள்வி எழுப்பிய சு.வெங்கடேசன் எம்.பி. “அதற்கு இப்பொழுது பாதுகாப்பு வீரர்கள் குறைவாக இருக்கிறார்கள் என்ற காரணத்தை சொல்கிறார்கள். போதிய பாதுக்காப்பு படை வீரர்கள் இல்லாமல் எப்படி இந்திய விமானத்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டது. எனவே சொத்தையான காரணங்கள் தான் இதற்கு அடிப்படை. எந்த ஒரு வளர்ச்சி திட்டத்தையும் உண்மையான ஒரு அக்கறையோடு செய்ய அவர்கள் தயாராக இல்லை.” என்று சாடினார்.

அதேபோல், தேசிய நெடுஞ்சாலையை சுரங்க பாதை வழியே இயக்குவது என்ற ஒரு ஆலோசனை விமான துறையால் ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் வாரணாசியில் இதனை சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால், மதுரை விமான நிலையம் என்று வருகிற பொழுது சுரங்கப்பாதை அமைக்க 600 கோடி ரூபாய் செலவு ஏற்படும். அதைவிட, சுற்றுச்சாலைக்கு போனால் 100 கோடி ரூபாய்க்கு குறையும் என்று சொன்னார்கள். இந்த பொருளாதார கணக்கு ஏன் வாரணாசிக்கு பொருந்தவில்லை. அதே திட்டம் மதுரைக்கு என்று வருகிற பொழுது 600 கோடி ரூபாய் செலவு வீண் என்று காரணம் சொல்கிறார்கள். எனவே பல தடைகளைத் தாண்ட வேண்டி இருக்கிறது தாண்டுவோம். நாம் வெற்றி பெறுவோம் என்றும் சு.வெங்கடேசன் எம்.பி. கூறினார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios