உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து,  காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் வியக்க வைக்கும் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட கோயில்கள் எக்கச்சக்கமாக உள்ளன. பல்வேறு பிரசித்தி பெற்ற கோயிலுக்குச் சென்று வழிபட்டிருப்போம். ஆனால் அந்த கோயிலின் பெருமைகள், சிறப்புகளை முழுமையாக அறிந்திருப்போமா என்றால் கேள்விக்குரிய விஷயமாகத் தான் இருக்கும். அப்படி தமிழகத்தில் மிக பிரபலமான கோயில்களில் ஒன்று தான் மீனாட்சி அம்மன் திருக்கோவில். இந்த கோவிலில் தினமும் பல்லாயிரக்காண பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

இந்நிலையில், இன்று காலை மீனாட்சி அம்மன் கோவிலின் மின்னஞ்சல் வாயிலாக ஒரு செய்தி வந்தது. அதனை கோவில் நிர்வாகிகள் ஓப்பன் செய்து படித்தபோது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நிர்வாகிகள் இதுகுறித்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

 

இந்த புகாரை அடுத்து உடனடியாக களத்தில் இறங்கிய போலீசார் வெடிகுண்டு நிபுணர்களை வைத்து கோயில் முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர். இதுவரை எந்தவித வெடிகுண்டுகளும் சிக்கவில்லை என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இதனையடுத்து, கோயில் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.