மதுரையில் இருக்கும் ஜான்சி ராணி பூங்கா அருகே மிகப் பழமையான புனித ஜார்ஜ் தேவாலயம் இருக்கிறது. கடந்த சில மாதங்களாக இந்த தேவாலயத்தை நிர்வகிப்பது தொடர்பாக இரண்டு தரப்பினரிடையே தொடர் மோதல் இருந்து வந்துள்ளது. 

இதைத்தொடர்ந்து மதுரை வருவாய் கோட்ட அலுவலர் தேவாலயத்தை நிர்வகிப்பது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் சில உத்தரவுகளை பிறப்பித்து இருந்தார். அதை எதிர்த்து தேவாலய குழு சார்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதில் 'வருவாய் கோட்ட அதிகாரியின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள 2-வது நிபந்தனையை ரத்து செய்ய வேண்டும். தேவாலயத்தில் பிரார்த்தனை மற்றும் மத நடவடிக்கைகள் மேற்கொள்ள தற்போதைய நிர்வாக குழுவுக்கு அனுமதி வழங்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்திருந்தது. அதன் முடிவில், தேவாலயத்தை நிர்வகிப்பதில் தற்போதைய நிர்வாக குழுவிற்கும் இதற்கு முன்பு இருந்தவர்களுக்கும் இடையே பிரச்சனை நிலவி வருவதால் கீழ் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் சிவில் வழக்கு நிறைவடையும் வரை மூன்றாம் நபரை வைத்து தேவாலயத்தை நிர்வகிக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி ஓய்வு பெற்ற நீதிபதி ஸ்டான்லி டேவிட் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சாமிதுரை ஆகியோரை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது. தேவாலயத்தை நிர்வகிக்க தேவையான ஆலோசனைகளை இவர்கள் வழங்குவார்கள் என்றும், அதன் மூலம் தேவாலயத்தில் அமைதி நிலவும் என்று நம்புவதாகவும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.