மதுரை கிரானைட் முறைகேடு வழக்கு.. பி.ஆர்.பழனிச்சாமி விடுதலை ரத்து.. உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!
மதுரை மேலூர் கிரானைட் குவாரி முறைகேடு வழக்கில் கிரானைட் குவாரி உரிமையாளர் பி.ஆர்.பழனிசாமி உள்ளிட்ட 3 பேரில் விடுதலையை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
மதுரை மேலூர் கிரானைட் குவாரி முறைகேடு வழக்கில் கிரானைட் குவாரி உரிமையாளர் பி.ஆர்.பழனிசாமி உள்ளிட்ட 3 பேரில் விடுதலையை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு, தனியார் பட்டா நிலங்களில் வைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களை அரசுடமையாக்கக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியர்கள் மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் இதுவரை 98 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், பி.ஆர்.பழனிச்சாமி, அவரது மகன் சுரேஷ்குமார் ஆகியோர் மீதான இரு வழக்குகளும், குவாரி அதிபர் ராம.சகாதேவன் ஆகியோர் மீதான ஒரு வழக்கும் மேலூர் நீதித்துறை நடுவர் மகேந்திரபூபதி முன்பு 2016ம் ஆண்டு மார்ச் மாதம் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப்பின் பி.ஆர்.பழனிச்சாமி, சுரேஷ்குமார், ராம.சகாதேவன் ஆகியோரை விடுதலை செய்து நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார்.
மேலும் நடுவர் தனது உத்தரவில், இந்த வழக்குகளை 2013-ல் தாக்கல் செய்த ஐஏஎஸ் அதிகாரி அன்சுல்மிஸ்ரா, அப்போது மாவட்ட ஆட்சியராக இல்லை என்றும், இருப்பினும் தான் ஆட்சியராக இருப்பதாக சொல்லி வழக்குகளை தாக்கல் செய்திருப்பதாகவும், மதுரை மாவட்ட ஆட்சியராக இருப்பதாக கூறி விசாரணையின் போது நேரில் ஆஜராக விலக்கு கோரியதாகவும். இதனால் அன்சுல்மிஸ்ரா மீதும், அவருக்கு சாதகமாக செயல்பட்ட அரசு வழக்கறிஞர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்தார். இந்த சம்பவம் நீதித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையத்து இந்த உத்தரவு தொடர்பாக மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்துக்கு மாவட்ட நீதிபதிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மகேந்திரபூபதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில், பி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்ட 3 பேரை விடுதலை செய்தும், ஐஏஎஸ் அதிகாரி, அரசு வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மேலூர் நீதித்துறை நடுவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மாவட்ட ஆட்சியர் சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் இரு மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதேபோல் பிஆர்பி உள்ளிட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து அரசு சார்பில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்து வந்த நிலையில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது.
அதில், கிரானைட் முறைகேடு வழக்கில் தொழிலதிபர் பி.ஆர்.பழனிசாமியை விடுவிக்கும் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.