மதுரையில் கடன் தொல்லையால் தாய், 2 மகள்களுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தாங்கள் ஆசையாக வளர்த்த நாய்க்கும் உணவில் விஷம் கலந்து கொண்டு கொன்றுள்ளனர்.

மதுரை ஒத்தக்கடை போலீஸ் நிலையம் அருகே உள்ள மலைச்சாமிபுரத்தில் வசித்து வந்தவர் அருண் (46), கட்டிட காண்டி ராக்டர். இவரது மனைவி வளர்மதி (38). இவர்களது மகள்கள் அகிலா (19), பிரீத்தி (17). அருணுக்கு சொந்த ஊர் திருச்சி ஆகும். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை ஒத்தக்கடையில் மலைச்சாமிபுரம் எல்கேடி நகரில் குடியேறினார். அப்பகுதிகளில் சில வீடுகளை கட்டி விற்பனை செய்து வந்துள்ளார். இதனால் குடும்பம் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அருணுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. முதலில் சாதாரண காய்ச்சல் என நினைத்த அவர் மருத்துவ பரிசோதனை செய்தபோது மூளை காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதற்காக கடன் வாங்கி பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்டபோதும் சிகிச்சை பலனின்றி அருண் பரிதாபமாக உயிரிழந்தார். கணவரின் திடீர் மரணம் மனைவி வளர்மதியை பெரும் மனவேதனையை ஏற்படுத்தியது. கொரோனா ஊரடங்கு காலத்தில் அருண் இறந்ததால் 2 மகள்களுடன் என்ன செய்வது என்று தெரியாமல் வளர்மதி தவிப்புக்குள்ளானார். ஒவ்வொரு நாளும் ஒருயுகமாக தெரிய அன்றாட செலவுக்கே திண்டாடும் நிலைமைக்கு தள்ளப்பட்டார்.

கடன் கொடுத்த அனைவரும் வளர்மதியிடம் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர். இதனால், வளர்மதியும் , மகள்களும் கடந்த சில நாட்களாகவே மனவேதனையில் இருந்து வந்துள்ளனர். இனி கடன் வாங்காமல் வாழ்வது என்றால் உயிரை விடுவதுதான் சிறந்தது என வளர்மதி முடிவு செய்தார். தனக்கு பிறகு மகள்கள் அனாதையாகி விடக்கூடாது என கருதிய அவர், 2 மகள்களிடமும் தற்கொலை முடிவு குறித்து கூறினார். இதனால் முதலில் அதிர்ச்சி அடைந்த மகள்கள் பின்னர் தாயின் முடிவுக்கு சம்மதித்தனர்.

நேற்று கார்த்திகை திருநாள் என்பதால் 3 பேரும் வீட்டின் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வழிபட்டனர். அதன் பிறகு உள் அறைக்கு சென்று விட்டத்தில் தனித்தனியாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். பின்னர், ஆசையாக வளர்த்து வந்த நாயுக்கும் வி‌ஷம் வைத்த உணவை கொடுத்தனர். அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் அந்த நாயும் பரிதாபமாக இறந்தது. இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கடன் தொல்லையால் 2 மகள்களுடன் தாய் தற்கொலை கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.